தனித் தமிழீழம் மலர முள்ளிவாய்க்கால் முற்றம் எழுச்சி கொடுக்கும்: வைகோ
தஞ்சை: தனித் தமிழீழம் மலர முள்ளிவாய்க்கால் முற்றம் எழுச்சி கொடுக்கும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது.
அதன் திறப்பு விழா கடந்த 6-ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் நேற்று மாலை நடைபெற்றன.
விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்யனாபுரம் முருகேசன் வரவேற்றார். விழாவை காசிஆனந்தன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:

சிலைகள் அல்ல
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாமல் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் அல்லாமல் உலககெங்கும் பரவி இருக்கும் நம் தமிழ் இன மக்கள் வேதனைப்பட்டோம். உயிரிழந்த தமிழர்களின் நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் நினைவு முற்றத்தில் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை வெறும் சிலைகள் அல்ல.

காமன்வெல்த் மாநாடு
அவர்களின் சிலைகளை நாம் பார்க்கும் போது நம் கண்களில் ரத்த கண்ணீர் வருகிறது. அங்கு தான் காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது. கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். மீறி அங்கு மாநாடு நடந்தால் இந்தியாவில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது.

இசைப்பிரியா படுகொலை
இலங்கையில் இசைப் பிரியா கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. அந்த கொடூர காட்சியை பார்க்கும் போது தொப்புள் கொடி உறவில் இருந்து தமிழ் உணர்வுகள் எழுகிறது. சிங்கள வெறியர்கள் பச்சிளம் குழந்தைகளையும் இளம் பெண்களையும், கர்ப்பிணி பெண்களையும் கொடூரமான முறையில் கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு படுகொலை செய்துள்ளனர்.

தனி ஈழம் மலர
அங்கு நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். ஈழத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு காலம் காலத்திற்கும் நம் வருங்கால சந்ததியினர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்காக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுச்சி கொடுக்கும். இதனை யாரும் இடிக்கவோ, தகர்க்கவோ நினைத்தால் விடமாட்டோம்.

உயிர் உள்ளவரை
இது ஒரு வீர வணக்கம் செலுத்தும் நினைவு தூண் போன்றது. இதை என் உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன். எனக்கு பிறகு இந்த முற்றத்தை காப்பாற்றுவது தமிழக மக்கள் மற்றும் உலக தமிழ் மக்கள் கடமையாகும்.
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை உலக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாக விளங்கும்.
இவ்வாறு வைகோ பேசினார்.

பழ நெடுமாறன்
விழாவில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஈழத் தமிழர்கள் பதைபதைக்க படுகொலை செய்யப்பட்டனர். 50 ஆயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில் இது போன்ற நிகழ்வு எங்கும் நிகழ்ந்தது இல்லை.

3 ஆண்டுகாலம்..
இந்தத் துயர சம்பவத்தை வருங்கால தலைமுறையினர்கள் அறிந்து கொள்வதற்காக தான் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவு முற்றம் அமைக்கும் பணிகள் 3 வருடமாக நடந்து வந்தது.

பாதுகாப்பது கடமை
உலகத் தமிழர்களுக்குச் சொந்தமானது.இதை யாராவது இடிக்க முற்பட்டால் அதைத் தடுக்க உயிர் மூச்சு உள்ள வரை போராடுவோம். இது தமிழ்நாட்டு மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் சொந்தமானது. இதை பாதுகாக்கும் கடமை மக்களுக்கு இருக்கிறது என்றார்.

வைகோ – பொன். ராதாகிருஷ்ணன்
இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், பாஜக தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

உயிர் தியாகம் செய்தவர்கள்
நிகழ்ச்சியில் நினைவு முற்றத்தில் சிலைகள் அமைத்த சிற்பிகளுக்கும், தமிழகத்தில் உயிர்தியாகம் செய்த முத்துகுமார் உள்ளிட்ட 20 பேர் குடும்பத்தினர் களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிதி வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications