அதெல்லாம் சோனியாதான் முடிவு செய்வார்.. கன்னியாகுமரியிலிருந்து நாராயணசாமி!
கன்னியாகுமரி: கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று கன்னியாகுமரி வந்த அவர் அங்கு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி தயாரித்து வருகிறார். இதற்காக பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்தும், வியாபாரிகள், தொழிலாளிகள், பெண்கள் உள்ளிட்டோரிடம் இருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மக்களுக்கு தேவையானவற்றை அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது.

வருகிற தேர்தலில் காங்கிரஸ் எந்த கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும், எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி முடிவு செய்வார். அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்சி கட்டுப்படும்.
கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் போது தான் கூட்டணி விவரங்கள் இறுதி ஆகும்.
இலங்கை தமிழர்களின் வாழ் வாதாரத்தை பேணவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. வடகிழக்கு மாகாணத்தில் குடியிருந்தவர்களின் நிலத்தை மீட்டு அவர்களை அங்கேயே மீள்குடியமர்த்தும் பணிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் நாராயணசாமி.
அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணியும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications