"சீரியஸ்" கணவர்கள்... மஞ்ச சேலை கட்டி தீ மிதித்து, பாதயாத்திரை போகும் சீரியல் "மனைவிகள்"!
சென்னை: காலத்திற்கேற்ப சீரியல்களில் காட்சிகளைக் கோர்த்து விடுவதில் நம் சீரியல் இயக்குநர்கள் ரொம்பவே கெட்டி.
அதன்படி, நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், சீரியல்களில் நாயகிகள் தீ மிதிப்பது, பாத யாத்திரை என பட்டையை கிளப்பி வருகின்றனர்.
மஞ்ச சேலை, சிவப்பு சேலை பத்து செட் என்று தோசைக்கு ஆர்டர் கொடுப்பது போல ஆளாளுக்கு சேலைக்கு ஆர்டர் கொடுத்து வாங்கி நாயகிகளை பக்தைகளாக்கி வருகின்றனர்.

உண்மைச் சம்பவங்கள்...
சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது அப்படியே சீரியல்களில் காட்சிகளாக்கி விடுகிறார்கள் இயக்குநர்கள். இவ்வாறு உண்மைச் சம்பவங்களை காட்சிகளாக்கும் போது அதற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பே தனி.

தெய்வமகள்...
சகாயம், கிரானைட் முறைகேடு, நரபலி என ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயத்தை அப்படியே தெய்வமகள் சீரியலில் காட்சிகளாக்கி விட்டார்கள்.

நரபலி...
அதில், காணாமல் போகும் சிறுமியை நரபலி கொடுக்க முயற்சிகள் நடக்கின்றன. தொழில் விருத்திக்காக தொழிலதிபர் இந்தச் செயலை செய்யத் திட்டமிடுகிறார்.

ஹாஸ்பிடலில் அட்மிட்...
இதேபோல், சீரியலுக்கு ஒருவராவது ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார். வம்சம் சீரியலில் சிறுமி ஒருவருக்கு பொய்யான ஆபரேஷன் செய்து கிட்னியைத் திருட திட்டமிடுகிறார் டாக்டர் ஒருவர்.

வாணி ராணி...
வள்ளி சீரியலிலும், வாணி ராணியிலும் நாயகர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற நாயகிகள் மஞ்சள் சேலை கட்டி, தீ மிதிப்பது, பாதயாத்திரைப் போவது போன்றவற்றை செய்து வருகின்றனர்.

பாவம்ய்யா பூஜா...
அதிலும் தத்துவம், புதுமை, முற்போக்கு பேசும் வாணி ராணி சீரியலில் பூஜாவுக்கு மஞ்சள் சேலை கட்டி நடக்க விட்டு விட்டார்கள். அவரும் பாவமாக நடந்து கொண்டிருக்கிறார்.

குத்தகை...
மாலையில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி சீரியலிலும் மாயா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதைப் பார்க்கும் போது ஹாஸ்பிடலை மொத்தமாக நமது சீரியல்காரர்கள் குத்தகை எடுத்து விட்டார்களோ என எண்ணத் தோணுகிறது.
என்னவோ போடா மாதவா!


Click it and Unblock the Notifications
