வட்டமிடும் கழுகு.. வாய் பிளக்கும் ஓணான்.. அது அப்ப.. ஸ்ரீரங்கத்தை மொய்க்கும் "கரன்சி" தேவதை!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீ ரங்கம்: இடைத்தேர்தலில் வார்டு வாரியாக பிரித்து பூத்துக்கு ஆட்களை நியமித்து ஓட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து பூத் சிலிப்பில் இருக்கும் ஆளுக்கு ஏற்ப பணத்தை பட்டுவாட செய்து சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை அள்ளி புது பார்முலாவை அறிமுகப்படுத்தியது திருமங்கலம்தான்.

2009ல் திமுக தொடக்கி வைத்த இந்த பார்முலாவை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுகவும் கெட்டியாக பிடித்துக்கொண்டது. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் ஐநூறு, ஆயிரம் என வகை தொகையில்லாமல் பணம் புரளவே, பக்கத்து தொகுதிக்காரர்கள் எல்லாம், எங்க எம்.எல்.ஏ எப்போ சாவார்... நம்ம தொகுதிக்கு எப்போ இடைத்தேர்தல் வரும் என்று ஆதங்க பெருமூச்சை விட வைத்தது.

Srirangam is all set to do a Thirumangalam

ஆனால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலோ சற்றே வித்தியாசமானது. எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குப் போகவே எதிர்பாரத விதமாக அதிர்ஷ்ட தேவதை இடைத்தேர்தல் வடிவில் ஸ்ரீரங்கம் வாக்காளர்களை பார்த்து சிரிக்க ஆரம்பித்திருக்கிறாள்.

பிப்ரவரி 13ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்படும் முன்பாகவே எத்தனையோ வகையான நலத்திட்டங்களை அறிவித்து வகையாக கவனித்து வைத்து ஆளும் கட்சியான அதிமுக.

முதல் கணக்கு

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் திமுக முதல் ஆளாக, கடந்த முறை ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப் போன ஆனந்தனை வேட்பாளரை அறிவித்து இடைத்தேர்தல் களத்தில் தனது கணக்கை தொடங்கிவிட்டது. இந்த இடைத்தேர்தலில் நட்சத்திர வேட்பாளர் யாரும் இல்லை என்ற தைரியம் மட்டுமல்ல. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் பிரசாரத்திற்கு வரமுடியாது என்ற கூடுதல் தெம்பும் இம்முறை திமுகவிற்கு கிடைத்துள்ளது.

ஆளும் கட்சியான அதிமுகவோ எப்படியும் வென்றே ஆகவேண்டும் கட்சியின் மாநகர் மாவட்ட இணைச்செயலாளரும், கவுன்சிலருமான வளர்மதியை களமிறக்கியுள்ளது.

போஸ்டர்கள் மூலம்

அம்மா இடத்தில் நானா? என்று தனக்குத்தானே ஆச்சரியப்படும் வளர்மதி அரசியலுக்கு வந்ததே தனி கதை. 1998ஆம் ஆண்டு திருச்சி 2வது தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேலுவை ஆதரித்து பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைத்து பிரபலமானவராம். இவர் ஏற்கனவே திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனவராம் ஆனாலும் இதில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஜாதி ஓட்டுக்கள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரமணர்கள், தாழ்த்தப்பட்டோர், உடையார்,முத்தரையர் என பலதரப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்தாலும் வெற்றியை தீர்மானிப்பது முத்தரையர்கள்தான். எனவேதான் திமுகவும், அதிமுகவும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளன.

வெற்றிக்கனி

2011முதல் இதுவரை நடைபெற்ற தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஜாதிபாசத்தை விட யார் எப்படி கவனிக்கிறார்கள் என்பதுதான் வெற்றிபெற்றுள்ளது. அமைச்சர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர்கள் வரை களமிறக்கி பூத் வாரியாக கையில் வாக்காளர்களை வசப்படுத்தியதன் விளைவாக ஆளுங்கட்சியே வெற்றியை ருசித்திருக்கிறது.

யாருக்கு செல்வாக்கு

அமைச்சர் பூனாட்சி,முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்சோதி, ஆலங்குடி எம்.எல்.ஏ கு.ப.கிருஷ்ணன், பெரம்பலூர் எம்.பி. மருதைராஜ், என முத்தரையர்கள் கோட்டையாக உள்ளது அதிமுக. அதேசமயம் திமுக வேட்பாளர் ஆனந்துக்கு முத்தரையர் சமுதாயத்தில் அவ்வளவாக செல்வாக்கு இல்லையாம்.

அண்ணன் பாத்துக்குவார்

கடந்த தேர்தலில் ஆனந்தன் போட்டியிட்டபோது கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தார். இம்முறை ராமஜெயம் மிஸ்ஸிங் ஆனாலும் நேருவின் மீதான நம்பிக்கையை ஆனந்த் கைவிடவில்லை.

அனல் கிளப்பும் பிரச்சாரம்

அம்மா தொகுதியை விட்டுவிடக்கூடாது என்று அதிமுக அமைச்சர்கள் பட்டாளமே களமிறங்கி வேலை செய்கிறது. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு வளர்மதி பிரசாத்தை தொடங்கிவிட்டார்.

ஜெ. இல்லாத இடைத்தேர்தல்

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, தேர்தல் பிரசாரத்திற்கு சென்றதால் அவரது ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. எனவே தனக்கும் அந்த மாதிரி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் ஜெயலலிதா எச்சரிக்கையாக உள்ளதால் அவர் பிரசாரத்திற்கு வரமாட்டார்.

அதிமுக படைபலம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் அனைத்து அமைச்சர் பட்டாளங்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஒன்றை அமைத்து களமிறக்கி விட்டுள்ளது. ஒன்றியம் வாரியாக தனித்தனி பொறுப்புகள் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திமுகவில் பெருந்தலைகள்

திமுகவில் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், கனிமொழி என ரவுண்டுகட்டி பிரச்சாரம் செய்யப்போகின்றனர். ஜெயலலிதா நேரில் வந்து பிரச்சாரம் செய்யமுடியாது என்ற தகவலே திமுக தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய கட்சிகள்

பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் இன்னும் வேட்பாளர் யார் என்று முடிவே செய்யவில்லை. யார் கண்டது காங்கிரஸ் கட்சி குஷ்புவையும், பாஜக சார்பில் நெப்போலியனையும் களமிறக்கினாலும் ஆச்சரியமில்லை.

கவுரவப்பிரச்சினை

இந்த இடைத்தேர்தல் அதிமுகவை பொறுத்தமட்டில் கவுரவ பிரச்னையான ஒன்று. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றபோதிலும், இத்தொகுதி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற பின்னர் சந்திக்கும் தேர்தல் என்பதாலும் அதிக வாக்குகளில் வெற்றி வித்தியாசத்தை காட்டி, மக்கள் மன்றத்தில் ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பம்பரமாய் சுற்றி வருகின்றனர் அதிமுகவினர்.

சில பல சங்கதிகள்

இடைத்தேர்தல் என்றாலே பிரச்சாரத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. குவார்ட்டர் பாட்டில், பிரியாணி மற்றும் தாராள கரன்சி சப்ளை என தொகுதி முழுவதும் அமர்க்களப்படும். தற்போது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்காளர்களைப் பார்த்து அதிர்ஷ்ட தேவதை கண் சிமிட்ட ஆரம்பித்திருக்கிறாள்.

ஓட்டுக்கு நோட்டு

ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 2,70, 129 வாக்காளர்கள் இருக்கின்றனர். வாக்காளர்களை கவனிக்கவும், கவர் செய்யவும் ஓட்டுக்கு நோட்டை உடனடியாக பட்டுவாடா செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டு ஒன்றுக்கு 2,000 வரை கொடுத்து வாக்குகளை அப்படியே அள்ள திட்டமிட்டுள்ளதாம் முக்கிய கட்சி.

யார் ரூபத்தில் வரும்

பால்காரர் வடிவிலோ, கூரியர் பாய் வடிவிலோ, எப்படி வேண்டுமானாலும் பணம் எட்டிப்பார்க்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். எனவே இன்னும் சில தினங்களில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்கள் வீட்டு வாசலில் அதிகாலை அல்லது இரவில் கரன்சி நோட்டுக்கள் கிடந்ததாக செய்திகள் வெளியாகலாம். கட்டு கட்டாக கரன்சிகள் பிடிபடலாம். வாக்காளர்களுக்கு கொடுக்கிறேன் பேர்வழி என்று சிலர் தங்களில் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம். எது எப்படியோ ஸ்ரீரங்கம் வாக்காளர்களை அதிர்ஷ்டதேவதை பார்த்து சிரிக்கிறாள் என்பது என்பது மட்டும் உண்மை.

ஓட்டுக்காக நோட்டை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை வாக்காளர்தான் தீர்மானிக்கவேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+