மருத்துவ கல்லூரியில் இடம்- ரூ72 கோடி மோசடி: எஸ்ஆர்எம் கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து அதிரடி கைது!!
சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி 102 மாணவர்களிடம் ரூ72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரை சென்னை போலீசார் அதிரடியாக இன்று கைது செய்தனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மதனிடம் பணம் கொடுத்ததாகவும், தங்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் பச்சமுத்து வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே மதனை கண்டு பிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதனை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
மேலும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாகத்தான் மதன் பணம் பெற்றுள்ளார் என்று 102 புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அண்மையில் நடந்த விசாரணையில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பச்சமுத்துவிடமும் விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பச்சமுத்துவுக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்பேரில் சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று மாலை பச்சமுத்து வந்தார். அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.
சுமார் 15 மணிநேரங்களுக்கு மேலாக நடந்த விசாரணையின் முடிவில் பச்சமுத்து நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். பின்னர் இரவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின் முடிவில் செப்டம்பர் 9ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவை அடுத்து பச்சமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications