ஜெ., ஆட்சி காலத்தில் எல்லாம் தமிழகத்தில் அம்சம்பாவிதங்கள்தான்.. பட்டியலோடு ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: ஜெயலலிதா ஆட்சி நடைபெறும்போதெல்லாம், தமிழகத்தில் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன என திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் நீதி விசாரணைக் கோரி, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:
ஜெயலலிதா ஆட்சி நடைபெறும்போதெல்லாம், தமிழகத்தில் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. 1991-96ம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஜெயலலிதா ஆட்சியின்போதுதான், கும்பகோணத்தில் மகாமகம் விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். அங்கு குளிப்பதை பக்தர்கள் பரவசமாய் பார்த்தபோது அந்த விபத்து ஏற்பட்டது.

ஜெயலலிதா ஆட்சியின்போது, 2004ம் ஆண்டு சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2014ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பெரும் சேதம் ஏற்பட்டது. மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து 61 பேர் உயிரிழந்தனர். தற்போது வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெள்ளம். இன்னும் எங்கே உறவினர்கள் என்று தேடும் நிலை உள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியளிப்பதாக செய்தி வந்துகொண்டுள்ளதே தவிர, அரசோ, காவல்துறையோ, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பலியானோர் எண்ணிக்கையை எடுத்து சொல்லும், துப்பு, திராணி இந்த ஆட்சிக்கு இல்லை.
ஆட்சி எப்படி நடக்கிறது தெரியுமா? மாவட்ட ஆட்சி தலைவர் ஒரு பேட்டி தருகிறார். அம்மா ஆணைக்கு இணங்க தமிழகத்தில் கனத்த மழை பெய்து கொண்டுள்ளது என பேட்டி தருகிறார். இன்னொரு அதிகாரியோ, துப்புரவு பணிக்கு அம்மா ஆணையால் செய்கிறேன். ப்ளீச்சிங் பவுடரே அம்மா ஆணைப்படிதான் போட வந்துள்ளேன் என்று இன்னும் சில அதிகாரிகள் கூறுகிறார்கள்.
முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வேண்டாமா, ஆறுதல் சொல்ல வேண்டாமா, என கருணாநிதி தொடர்ந்து அறிக்கை வெளியிட்டார், பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அதன்பிறகு ஜெயலலிதா ஆர்.கே.நகர் சென்று அரை மணி நேரம் வலம்வந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றதை போல ஜெயலலிதா சென்றார்.
வேனில் இருந்து கீழே இறங்கினாரா? கண்ணாடியை இறக்கியாவது மக்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்டாரா? இல்லையே. எதிர்பாராத மழை வந்ததால் இந்த பாதிப்பு என ஜெயலலிதா சொல்கிறார். வானிலை இலாகா மழை வரும் என்று ஐந்தாறு நாட்கள் முன்பே எச்சரிக்கை விடுத்தது.
மத்திய அமைச்சர் ஜவடேக்கர், நாடாளுமன்றத்தில் பேசுகையில், தமிழகத்தில் பெருமழை பெய்யும் என முன்கூட்டியே தமிழகத்துக்கு எச்சரித்தோம் என கூறியுள்ளார். அந்த அமைச்சருக்கு, இந்த ஆட்சி விளக்கம் சொல்லியுள்ளதா? இல்லையே.
சட்டசபையை கூட்டுங்கள், மழை வெள்ள பிரச்சினையை பேசுவோம் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்கிறோம். திமுக சார்பில் ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதியை கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். அனைத்து கட்சி குழுவை கூட்டுங்கள், ஒருங்கிணைப்பு குழுவை கூட்டுங்கள், கட்சிகள் தாண்டி பல தரப்பு கொண்ட குழு அமைத்து, நிவாரண பணிகளை அவர்கள் மூலமாக செய்யுங்கள். அப்படி செய்தால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சென்று சேரும், ஊழல் நடைபெறாது என கருணாநிதி கூறினார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது எத்தனையோ முறை மழை பெய்தது. அப்போது கருணாநிதி அதை எப்படி சமாளித்தார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இப்போது சென்னை பாதிக்கப்பட்டுள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதாதான் முழு காரணம். அமைச்சரவை என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு. பிறர் மீது பழிபோட்டு ஜெயலலிதா தப்பிக்க முடியாது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் ஜெயலலிதாவுக்கு வரும். 2016ல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையும்போது, இதற்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்லியாக வேண்டிவரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications