ஜெ.வுக்கு மட்டுமல்ல உங்களுக்கும்கூட ஒரு வணக்கம்... ஸ்டாலினின் ஜாலி பதில்
சென்னை: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வணக்கம் கூறியது தொடர்பான கேள்விக்கு, ‘உங்களுக்கும்கூட வணக்கம் தெரிவிக்கிறேன்' என செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் திமுக பொருளார் ஸ்டாலின்.
அதிமுக அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா பதிலளித்திருந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக நேற்று சட்டசபையில் ஜெயலலிதாவும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். இதுவும் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைதைத் தொடர்ந்து, அதில் இரு பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்று அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் ஸ்டாலின். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு ஸ்டாலின் கூறியதாவது:-

வேட்புமனுத் தாக்கல்...
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைவதை ஒட்டி, அந்த பதவிகளுக்கு திமுகழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், அதனைத் தொடர்ந்து கழகத்தின் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்' என்றார்.

பலம் வாய்ந்த எதிர்க்கட்சி...
அதனைத் தொடர்ந்து திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். உங்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் ? என்ற கேள்விக்கு, "அவர் நேற்றைக்கு அப்படி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு வந்தபோதே நான் அதனை குறிப்பிட்டுள்ளேன். இதுவரை தமிழக வரலாற்றிலேயே இவ்வளவு பலம் வாய்ந்த எதிர்கட்சி அமைந்தது இல்லை. ஆகவே, இந்த சூழ்நிலையில் பெரும்பான்மை பலம் பெற்று எதிர்கட்சியாக உள்ள திமுக இதனைப் பயன்படுத்தி கொண்டு, தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவைகள் உள்ளனவோ, முக்கியமான பிரச்சினைகள் என்னென்ன உள்ளனவோ அவற்றையெல்லாம் மையமாக வைத்து எங்கள் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்" எனப் பதிலளித்தார்.

திமுகவின் எண்ணம்...
மேலும், கடந்த ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதி சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் உரிய வசதி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததே. இப்போது உரிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நேற்று எந்த நிலையில் வந்து கையெழுத்திட்டு விட்டுச் சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே இந்த அரசு அதற்கு ஏற்றவகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம்' என்றார் ஸ்டாலின்.

வணக்கம்...
அதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவியேற்பு விழாவில் உங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்பது ஒருபுறம் சர்ச்சையாக மாறி, அதற்கு முதல்வர் விளக்கம் அளித்த நிலை, அதேபோல நேற்று சட்டசபையில் பரஸ்பரம் நீங்கள் இருவரும் வணக்கம் செலுத்திக் கொண்ட சூழ்நிலை குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘உங்களுக்கும் கூட இப்போது வணக்கம் தெரிவிக்கின்றேன்" என நகைச்சுவையாக பதிலளித்தார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications