அனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை.. பீதியை கிளப்பும் பகீர் தகவல்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அனுமதியின்றி பலமுறை இயங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை அனுமதியின்றி பலமுறை இயங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீரை எடுத்து சோதனை
அதாவது ஸ்டெர்லைட் ஆலையில் முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர்.

உடல்நலம் கெடுக்கும்
இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது என அவர் கூறினார். குடிநீரில் அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது
இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்கவேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக நித்யானந்த ஜெயராமன் தெரிவித்தார்.

மின்சாரம் தடை
இதேபோல் காற்றிலும் அதிகளவு ஸ்டெர்லைட் மாசு கலந்திருப்பதாக அவர் கூறினார். மேலும் இதற்கு முன்பும் 1998 நவம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படியும், 23.3.2013, 9.4.2018 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. கடந்த 23-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அனுமதியின்றி விவரம்
பல நாட்கள் ஸ்டெர்லைட் ஆலை அனுமதியின்றி இயங்கியதாகவும் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கிய நாளில் இருந்து அனுமதி இன்றி இயங்கிய நாட்களின் விவரம்
1997 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)
- 1999 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை (49 நாட்கள்)
- 1999 டிசம்பர் 1-ந் தேதி முதல் 2005 ஏப்ரல் 18-ந் தேதி வரை (5 ஆண்டுகள், 4 மாதங்கள், 18 நாட்கள்)
- 2006 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)
- 2006 அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரை (42 நாட்கள்)
- 2007 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை (36 நாட்கள்)
- 2007 அக்டோபர் 1-ந் தேதி முதல் 2009 ஜனவரி 1-ந் தேதி வரை (ஒரு ஆண்டு, 3 மாதங்கள்)
- 2009 ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 13-ந் தேதி வரை (4 மாதங்கள், 13 நாட்கள்)
- 2010 ஜனவரி 1-ந் தேதி முதல் 2011 ஏப்ரல் வரை (ஒரு ஆண்டு, 4 மாதங்கள்)
இவ்வாறு ஸ்டெர்லைட் ஆலை குறித்து சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications