போராட்டத்தை நிறுத்த சொல்வதற்கு முன்.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துங்க.. வேல்முருகன் ஆவேசம்
நெடுவாசல் போராட்டத்தை நிறுத்த சொல்வதற்கு முன்னர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசை நிறுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை: நெடுவாசல் போராட்டத்தைக் கைவிடச் சொல்பவர்கள் அதற்கு முன் மத்திய அரசை ஹைட்ரோ கார்பன் திட்டத்தையல்லவா கைவிடச் சொல்ல வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
90 நாட்களைத் தாண்டித் தொடரும் அந்தப் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார் அத்தொகுதி உறுப்பினர் மெய்யநாதன்.

போராட்டத்தை கைவிடுங்கள்
அதற்குப் பதிலளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் இந்த அரசு அனுமதிக்காது; அரசின் இந்த வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் என்றார்.

வாக்குறுதி என்ன ஆச்சு?
அரசை நாம் கேட்கிறோம்: இதற்கு முன் மின்துறை தொடர்பான உதய் திட்டம், மருத்துவக் கல்லூரிக்கான நீட் நுழைவுத் தேர்வு, சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜிஎஸ்டி போன்றவற்றிலெல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று? அவற்றிலெல்லாம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக மோடியின் விருப்பத்தையல்லவா நிறைவேற்றினீர்கள்.

மோடியால்,,, மோடிக்காக,, மோடியுடைய அரசு
மக்களால், மக்களுக்காக, மக்களுடைய அரசு என்பதுதான் மக்களாட்சிக் கோட்பாடு. ஆனால் அதற்கு நேர் மாறாக மோடியால், மோடிக்காக, மோடியினுடைய அரசுதான் இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. எனவே மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் நெடுவாசல் மக்களிடம் போராட்டத்தைக் கைவிடச் சொல்கிறீர்கள் என்பதுதான் உண்மையாகிறது.

ஏமாற்றப்பட்ட வாக்குறுதி
மேலும் நெடுவாசல் மக்களிடம் போராட்டத்தைக் கைவிடச் சொல்வது இது ஒன்றும் முதல் முறையல்ல. நெடுவாசலில் இப்போது நடப்பது இரண்டாவது முறைப் போராட்டம். முதலில் நடந்த போராட்டம் 47 நாட்களை எட்டிய தருணத்தில் இதேபோல்தான் "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்த அரசு அனுமதிக்காது; அரசின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடுங்கள்" என்றீர்கள். மக்களும் அதை நம்பி போராட்டத்தை விலக்கிக் கொண்டார்கள்.

ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ஆனால் மறுநாளே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்த ஒப்பந்தம் போட்டு நடுவண் அரசு அறிவித்தது. பாஜக எம்.பி ஒருவருடைய "ஜெம் லேபரட்டரீஸ் பி லிட்" நிறுவனத்துடன்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கான தாக்கீது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

90வது நாளாக போராட்டம்
இது தெரிந்து அதிர்ச்சியுற்றனர் நெடுவாசல் மக்கள். தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த அவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டம்தான் 90 நாட்களைத் தாண்டி இப்போது தொடர்கிறது. ஆக ஏற்கனவே அரசின் வாக்குறுதியை நம்பி ஏமாந்த மக்கள், இனியும் அப்படி ஏமாற மாட்டோம் என்பதைச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டம்.

திரும்பப் பெற வலியுறுத்தல்
எனவே நெடுவாசல் போராட்டத்தைக் கைவிடச் சொல்லும் அரசு, அதற்கு முன் நடுவண் அரசை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திச் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications