குறையாத உற்சாகம்.. நிலைகுலையாத நம்பிக்கை... வீர முழக்கத்துடன் மெரினாவில் 6வது நாளாக போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரும் வரை போராட்டம் நீடிக்கும் என சென்னை மெரினா போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ள
சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 6வது நாளை எட்டியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடந்த திங்கட் கிழமை முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நேற்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டுப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். நிரந்தர திர்வு வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதுதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டம் இன்று 6வது நாளாக நீடிக்கிறது. அதேநேரத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் மெரினாவில் குவிந்து வருகின்றனர்.
சென்னை மெரினாவில் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். நிரந்தர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி மீண்டும் இதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்ட முடியாத என்பதால் நிரந்தர தீர்வு வரும் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
