டைல்ஸை உடைத்து களிமண்ணை கொட்டியவர் கருமுத்து கண்ணன்! மீனாட்சியம்மன் கோயில் குளம் பற்றி சு.வெங்கடேசன்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காராக கருமுத்து கண்ணன் பொறுப்பேற்ற பிறகு தான் கோயில் குளத்தில் போடப்பட்டிருந்த டைல்ஸ்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு கண்மாய் களிமண் கொட்டப்பட்டதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தியாகராசர் கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக தாம் எதிர்ப்பு தெரிவித்தும் தன்னை முதல்முறையாக சந்தித்த போது வாஞ்சையோடு பேசியவர் கருமுத்து கண்ணன் என நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணனை பொற்றாமரைக்குளத்தின் அடிநிலம் என புகழ்ந்து சு.வெங்கடேசன் எழுதிய கட்டுரை வருமாறு;
பொற்றாமரைக்குளத்தின் அடிநிலம் : ''கோயில்களில் தேரோட்டம் முடிந்த மறுநாள் தடம்பார்க்கும் நிகழ்வு நடக்கும். அது விழாவுக்கானது மட்டுமல்ல, வாழ்க்கைக்கானதுந்தான். மனிதர்களின் மறைவுக்கு பின் அவர்கள் பதித்துச்சென்ற தடத்தைப் பார்த்தே அவர்களின் செயல்களையும் சிறப்புகளையும் மக்கள் பேசுகின்றனர். எனவேதான், 'தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்' என்கிறது திருக்குறள்.
இந்தியாவில் மிகஅதிகமான திருவிழாகளைக்கொண்டாடும் கோயில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். அக்கோயிலின் தக்காராக 18 ஆண்டுகள் இருந்தவர் கருமுத்து தி. கண்ணன் அவர்கள். ஆண்டு முழுவதும் நிகழும் கொண்டாட்டத்தின் பேரோசைக்கு இடையில் சத்தமில்லாமல் அவர் செய்துள்ள திருப்பணிகள் இன்று பலராலும் நினைவுகூறப்படுகின்றன.

கோயில் திருப்பணிகள்:
கருமுத்து தி. கண்ணன் அவர்கள் முன்னின்று எத்தனைக் கோயில்களின் திருப்பணியையும் குடமுழுக்கையும் நடத்தியிருப்பார் என்ற கணக்கிற்கு இந்த கட்டுரை எழுதப்படும் வரை முழுமையான விபரங்களைச் சேகரிக்க முடியவில்லை. "எண்ணற கோயில்களுக்கு" என்றுதான் பலரும் சொல்கிறார்கள். எண்ணிக்கையில் துல்லியத்தைக் கடைபிடிக்கும் ஒரு மனிதரின் பணியைப் பொதுவான எண்ணிக்கையில் சொல்வதற்கு வருந்துகிறேன். ஆனால் "அறியாமல் செய்வது அறமெனக்கொள்க" என்ற முன்னோர் வாக்கின் நீட்சியே இது.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், ஐய்யம்பொழில் ஈஸ்வர் கோயில், திருவாப்புடையார் கோயில், தெப்பக்குளம் முத்தீஸ்வர் கோயில், ஆதி சொக்கநாதர் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் கோயில், அனுமந்தராயர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் குடமுழுக்கு விழாவை முன்னின்று நடத்தியவர்.
சைவசித்தாந்தத்திலும் சைவ இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்பும் நுட்பமான அவதானிப்பும் கொண்டவர். அரசியற் செல்வாக்குப்பெற்ற வளமிக்க பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களே கோயில் தக்கார்களாக வருவதால் பெரும்பாலும் அது ஆன்மீகத்தளத்தின் அலங்காரப் பதவியாகவே இருக்கிறது. நிர்வாக விசயத்தில் அரசு அலுவலர்கள் கோயிலை வழிநடத்துபவார்கள். அந்த வகையில் கோயில் தக்காராகக் கருமுத்து தி. கண்ணன் அவர்களின் பங்களிப்பு தனித்துவம் மிக்கது.
மீனாட்சி அம்மன் கோயில் பூசகர்கள்:
"தேவியின் திருப்பணியாளர்கள்" என்ற மீனாட்சி அம்மன் கோயில் பூசகர்கள் வரலாறு தொடங்கி தேவியின் எந்த பல்லக்கிற்கு செம்மாலை பூவலங்காரம் செய்யப்பட வேண்டும் என்பது வரை அவரிடம் தெளிவுண்டு. கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கல்யாண சுந்தர் சிற்பம் பற்றியும் வேப்பந்தூரார் கோபுர வாசலில் உள்ள பலகைவோவியத்தைப் பற்றியும் சொல்ல அவரிடம் நுட்பமான செய்திகள் பல உண்டு. கலை ஈடுபாடும் ஆன்மீக ஈடுபாடும் ஒருங்கேகொண்ட மனிதரிடம் ரசனையும் பக்தியும் எப்பொழுதும் கைகுலுக்கி நிற்கும்.
டைல்ஸ்க்கு பதில் களிமண்:
இவர் தக்கார் பொறுப்புக்கு வரும் முன்பு, மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் நீர் நிற்கவேண்டும் என்பதற்காக கல்பதித்து அதன் மீது டைல்ஸ் ஒட்டியிருந்தார்கள். பொற்றாமரைக்குளத்து நீர் டைல்ஸ் மீதுதான் பல ஆண்டுகளாக தேங்கியிருந்தது. இவர் தக்காராக பொறுப்பேற்ற பிறகு டைல்ஸ்சையும் அதன் கீழ் பதிக்கப்பட்ட கற்களையும் உடைத்து எடுத்தார். மதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்க் களிமண்ணை சென்னை ஐஐடி குழுவைக்கொண்டு ஆய்வுசெய்து நீர்தேக்கிவைக்குந்திறன் (Water Retaining Capacity) அதிகம் இருக்கும் களிமண் என கீழமாத்தூர் கண்மாய்க் களிமண்ணைக் கண்டறிந்து, அதனை எடுத்துவந்து ஒன்றரை அடிக்கு பொற்றாமரைக்குளத்தில் மேவி அதன் பின்னர் நீரைத் தேக்கினார். குளத்துக்குரிய இயற்கைத்தன்மையில் இன்றுவரை பொற்றாமரைக்குளம் நீர் நிறைந்திருக்கிறது.
செல்வமும் அதிகாரமும் இருக்கும் மனிதர்கள் இன்னும் சிறந்த டைல்ஸ் பதிக்கத்தான் பெரும்பாலும் நினைப்பார்கள். திருப்பணி என்பதால் இன்னும் அதிகம் செலவழித்து ராஜஸ்த்தான் மார்பள் கொண்டுவந்து பதிப்பார்கள். ஆனால் களிமண்ணை ஆய்வுசெய்து குளத்தின் இயற்கையான அடிநிலத்தை செழிப்புறச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதற்காக மாதக்கணக்கில் நேரத்தைச் செலவழிப்பதும் வெறும் பொருள் சம்பந்தப்பட்டதன்று. அறிவுநுட்பமும் ஆன்மீக ஈடுபாடும் ஒருங்கேகொண்ட செயல்பாடு. இதுபோன்று கருமுத்து தி. கண்ணன் அவர்களின் தனித்துவ பங்களிப்புக்கு பல உதாரணங்கள் உண்டு.
வியப்பின் உச்சம்:
ஒரு நாள், நாங்கள் இருவரும் கோயில் பிரகாரத்தில் பேசியபடி நடந்துகொண்டிருந்தோம். அப்பொழுது நான் கேட்டேன், "நான் அறிந்தவரை சைவ, வைணவக்கோயில்களில் பாசுரங்கள் பாடிய இறையடியார்களுக்குக் கோயிலுக்குள் சிலையும் மாலை சூட்டும் மரபும் உண்டு. ஆனால் மீனாட்சியம்மன் கோயிலில் மட்டும் திருமலை மன்னருக்கு தினசரி மாலைசூட்டும் மரபிருக்கிறதே. இந்த மரபுக்கு என்ன காரணமாக இருக்கும்?" அதற்கு அவர் சொன்ன பதில் வியப்பின் உச்சம்.
எல்லா அரசர்களும் கோயில்களுக்குத் திருப்பணி செய்துள்ளனர். எளிய மனிதர்கள் தமது கையிலிருக்கும் காசில் சூடம்வாங்கி ஏற்றுவதைப்போல, பேரரசர்கள் தமது கையிலிருக்கும் காசில் கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டியுள்ளனர். இறைப்பணியைப் பொறுத்தவரை இரண்டும் ஒரே நிலைதான். அப்படியிருக்க திருமலை மன்னருக்கு மட்டும் இந்தச் சிறப்பு மரியாதை கோயிலில் இத்தனை நூறு ஆண்டுகளாக ஏன் நடக்கிறது" என்று சொல்ல ஆரம்பித்தார். நான் வியந்த நின்ற கணம் அது. அதிகாரநிலைப் பங்களிப்பு அன்று ஆன்மீகம். அதைத்தாண்டிய உண்மையான இறைநிலை என்பதைப்பற்றி அவர் சொன்ன விளக்கம். ஆன்மீகம், வரலாறு, அரசியல் என்று அனைத்திலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடு. அந்த சிந்தனைத்தெளிவுதான் அவரது ஆன்மீகத் திருப்பணிகளின் அடிப்படை என்று நான் கருதுகிறேன்.
துலாக்கோலின் துல்லியம்:
கடந்த கால் நூற்றாண்டாக, பல்வேறு சூழலில் மதுரையில் அரசியல் அதிகாரம் தாண்டவமாடிய காலத்திற்கூட மீனாட்சி அம்மன் கோயில் ஆலய நிர்வாகத்தை எதன் பொருட்டும் யார் பொருட்டும் இம்மியளவும் இசைந்துகொடுக்காமல் துலாக்கோலின் துல்லியத்தோடு நடத்தியவர்.
இன்னொரு பக்கம் ஆன்மீகத்தில் துளியும் அரசியல் கலப்பதை விரும்பாதவர். அதன் காரணமாகவே அவர்மீது சிலருக்கு ஒவ்வாமை இருந்துகொண்டே இருந்தது. அதை அறிந்தே அவர் தனது பணியைச் செவ்வனச் செய்தார். அவரது ஆன்மீகப் பங்களிப்பு எல்லோராலும் போற்றப்படுவதற்கு அதுவே அடிப்படை.
2013ஆம் ஆண்டு 'மாமதுரை போற்றுவோம்" என்ற பெருவிழாவை மதுரையில் நடத்தினோம். மதுரைக்கு அவரளித்த மற்றுமொரு மகத்தான பங்களிப்பென்று அதனைச் சொல்வேன்.
பண்பாட்டுத் திருவிழா:
சுமார் இருபது ஆண்டுகள் திருப்பரங்குன்றத்தில் கலைஇலக்கிய இரவுகளை நடத்திய அனுபவத்தோடு மதுரையில் மாபெரும் பண்பாட்டுத் திருவிழா ஒன்றினை நடத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்டநாட்களாக இருந்ததுண்டு. காவல்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருந்த நேரமது. அந்த நேரத்தில் என் நண்பர் அன்சூல் மிஸ்ரா மதுரையின் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அவரிடம் ஒரு சந்திப்பின்போது இந்த எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டேன்.
அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபொழுது கோவை மாநகராட்சி ஆணையராக இருந்தவர் அன்சூல் மிஸ்ரா. எனவே, எனது அந்தக் கனவைச் சட்டென பற்றிக்கொண்டார். அடுத்த சந்திப்பிலேயே அதைச் செயலாக்குவது குறித்துப் பேசினோம். அப்பொழுது அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அதிகாரத்தின் இடையூறு இல்லாமல் இப்படியொரு பெருவிழாவை மதுரையில் நடத்துவதுபற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அரசின் அரசியல் தலையீடு இல்லாமல் இந்த விழாவினை நடத்த வேண்டும். வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால் அப்பெருவிழாவுக்கு அரசிடமிருந்தும் பாதுகாப்பு தேவைப்பட்டது. அந்த பாதுகாப்பை அளிக்கக்கூடிய மனிதராக எங்களுக்கு தோன்றியது கருமுத்து தி. கண்ணன் அவர்கள்தான்.
நேரடியாகப் பழக்கம் கிடையாது:
ஆனால் ஆட்சியருக்கோ, எனக்கோ அவரோடு நேரடியாகப் பழக்கம் கிடையாது. அவர் விழாத்தலைவராக இருக்க சம்மதிக்கவில்லையென்றால் அந்த விழா சாத்தியமன்று. கோயில் சார்ந்த திருப்பணிகள் தவிர அதுபோன்ற சமூகம் சார்ந்த விசயங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை. ஈடுபடுத்திக்கொள்ளவும் மாட்டார் என்று அவரை அறிந்தவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.
சரி, முயற்சிசெய்து பார்ப்போம் என்று நானும் நண்பர் திரு.அண்ணாமலை அவர்களும் அவரைச் சந்திக்கப்போனோம். போவதற்கு முன் எனக்குள் நிறைய கேள்விகள் இருந்தன. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தியாகராசர் கல்லூரியை நிகர்நிலை பல்கலைக்கழகமாக ஆக்கும் முயற்சிக்கு எதிராக அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி. மோகன் அவர்களோடு இணைந்து போராட்டம் நடத்தியுள்ளோம். அதன் காரணமாக தமிழக அரசு அத்திட்டத்தை கைவிட்டது. இது சார்ந்த கோபமும் வருத்தமும் அவருக்கு என் மீது நிச்சயம் இருக்கும் என்ற எண்ணத்தோடுதான் சந்திக்கப்போனேன்.
ஆனால் அறைக்குள் நுழைந்தும் சாகித்ய அகாதமி விருது பெற்றதற்காக பொன்னாடை போர்த்தி என்னை வரவேற்றார். நான் அதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மாமதுரை போற்றுவோம்:
அதன்பின் வந்துள்ள நோக்கத்தைப் பற்றி சொன்னோம். "மாமதுரை போற்றுவோம் என்றொரு விழா நடத்த எண்ணியுள்ளோம். மதுரையின் தொன்மையைப் போற்றுவோம், வரலாற்றைப் போற்றுவோம், வைகையைப் போற்றுவோம் என்ற தலைப்புகளில் மூன்றுநாள் விழா. சுமார் ஐந்து லட்சம் மக்களாவது பங்கெடுப்பதைப்போல இந்த விழா அமைய வேண்டும். மதுரையின் அனைத்துப் பரிணாமத்தையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் பெருங்கொண்டாட்டமாக அது இருக்க வேண்டும்" என்று எனது கற்பனையில் இருந்த அனைத்தையும் சொல்லி முடித்தேன்.
அதன் உண்மைத்தன்மை அவரை மிகவும் கவர்ந்து. சிறுதயக்கங்கூட இல்லாமல் விழாத்தலைவராக இருக்க உடனே சம்மதித்தார். ஒரு சதவிகிதம் நம்புவதற்கு நூறு சதவிகிதம் யோசிக்கக்கூடிய மனிதர் என்று அவரைப்பற்றிச் சொல்லக்கேட்டுள்ளேன். தனக்கு உண்மை எனப் பட்டதை துணிந்து செய்யக்கூடியவர்.
அதன்பின் மாமதுரை போற்றுவோம் நிகழ்வுக்கான வேலை தொடங்கியது. திரு. பரத் கிருஷ்ண சங்கர் அவர்களும் நானும் துணைத்தலைவர்களாகப் பொறுப்பேற்று அப்பெரும்பணியைச் செய்தோம். எங்களின் வாழ்வில் நாங்கள் நிகழ்த்திய மாபெரும் பண்பாட்டுத் திருவிழா அது. மொத்த மதுரையே கொண்டாடியது. இன்று வரை பல நகரங்களில் நடக்கும் பல விழாகளுக்கு அது முன்னுதாரணம்.
கூச்சல் கொஞ்சம் குறைந்து:
விழாவின் பிரமாண்டத்தன்மை வெளித்தெரியத் தொடங்கியபின் என்னைப் பற்றிய பின்குறிப்புகளை அவரின் கவனத்துக்கு இடைவிடாது கொண்டுசென்றவர்கள் உண்டு. "வெங்கடேசன் ஒரு மார்க்சிஸ்ட், முழுநேர அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் என்ற முழு அடையாளத்தையும் உணர்ந்தே இந்தப் பணியில் இறங்கி இருப்பதாக" அவர் தெளிவுபடுத்தினர். அதன் பின்னர்தான் அந்தச் கூச்சல் கொஞ்சம் குறைந்து.
"மாமதுரை போற்றுவோம்போன்று இன்னொரு விழாவினை நாமே நினைத்தாலும் இனி நடத்த முடியுமா என்று தெரியவில்லை" என நாங்கள் பலமுறை பேசியுள்ளோம்.
இந்நிகழ்வு முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப்பின் நான் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டேன். அதற்காக அகமகிழ்ந்து என்னை வாழ்த்தினார். மாண்பும் மரபும் கருதி அவர் சொன்ன வார்த்தையைப் பதிவிடாமல் அவரின் மகிழ்வை மட்டும் பதிவிடுகிறேன்.
உதவுங்கள் என்று கேட்டவுடன்:
நாடாளுமன்ற உறுப்பினரானபின் அதே மாமதுரை போற்றுவோம் குழுவின் சார்பில் மதுரைக்கு ஏதாவது முக்கியச்செயல் செய்யவேண்டும் என்று யோசித்தோம். மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கலாம் என்று முடிவுசெய்தோம். அதற்கான மூன்று சந்திப்புகளை மதுரையிலும் சென்னையிலும் நடத்தினோம். சமையலறைக்கான இடம், கட்டிடம், நவீன சமையல் இயந்திரங்கள் ஆகியவற்றை முழுமையாக அவரே தந்துவிடுவதாகக் கூறினார். மிகவேகமாக வேலைகள் தொடங்கின. அந்தக் காலத்தில் கொரோனாத் தொற்று வந்துசேர்ந்து. எல்லா வேலைகளும் நின்றுபோயின. சமூகத்தின் முன்னுரிமை, மருத்துவம் சார்ந்து மாறியது. அப்பொழுதும் மிகச்சிறப்பாக செயல்பட்ட ஆஸ்டன்பட்டி மருத்துவமனைக்கு உதவுங்கள் என்று கேட்டவுடன் 500 லிட்டர் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர், நோயாளிகளுக்கு உணவு, மருத்துவர்கள் தங்குவதற்கான இடம், அவர்கள் சென்றுவர வாகனங்கள், மருத்துவத்துணைக்கருவிகள் என்று அந்த மருத்துவமனையையே தத்தெடுத்துக்கொண்டதைப்போல அதற்குத் தேவையான அனைத்தையும் செய்தார்.
கொரோனா காலம் முடிந்து சட்டமன்ற தேர்தலுக்குப்பின் பொறுப்பேற்ற திமுக அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனவே நாங்கள் ஏற்கனவே யோசித்த திட்டத்தை கைவிட்டோம். எங்களின் கனவு கூடுதல் சிறப்போடு நிறைவேறிய மகிழ்ச்சி எங்களுக்கு உண்டு.
அதன் பிறகு மதுரை நகருக்குள் இருக்கும் குளங்களையெல்லாம் புனரமைக்கும் முயற்சியைத் தொடங்கலாம் என்று எண்ணினோம். ஈரோட்டில் "ஒளிரும் ஈரோடு" அமைப்பு மிகச்சிறப்பாக அந்தப் பணியை செய்துள்ளதைக் கேள்விப்பட்டு அதன் தலைவர் அக்னி சின்னசாமி அவர்களை வரவழைத்து மதுரை நகரத்துக்குள் இருக்கும் குளங்களைச் சீரமைக்க என்ன செய்யலாம் என்று விரிவாகக் கலந்துரையாடினோம். அதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கத் தொடங்கினோம். சிறிது நாளில் கொரோனா இரண்டாவது அலை வந்து சேர்ந்தது.

இப்படியாக மதுரைக்கான பொதுநலனுக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஈடுபாட்டோடு செயலூக்கமிக்க பங்களிப்பைச் செலுத்தியபடி இருந்தார்.
பணம் வாங்காமல்:
மதுரை மற்றும் தென்தமிழகத்தின் தொழில், கல்வி ஆகியவற்றின் வளர்ச்சியில் அவரின் பங்களிப்பும் அக்கறையும் போற்றத்தகுந்து. நானறிந்தவரை பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குப் பணம் வாங்காமல் மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்விநிறுவனம் அவருடையதே. வணிகவேட்கையே கல்வியின் நியதி என்று ஆகிப்போன இந்தக்காலத்தில் தனது கொள்கையில் உறுதியுடன் நிற்கும் மனிதராக அவர் இருந்தார்.
மாமதுரை போற்றுவோம் நிகழ்வின் நிறைவு நாளில் "வைகையைப் போற்றுவோம்" என்ற நிகழ்வை நடத்தினோம். வைகையின் இரு கரைகளிலும் ஆயிரக்கணக்கான மாணவிகளும் பொதுமக்களும் கையில் விளக்கோடு வைகையைப் போற்றிக் கொண்டாடினர். சங்க இலக்கியத்தில் வைகைக் கரையில் விளக்கேற்றும் திருவிழா பற்றிய குறிப்பில் இருந்துதான் இந்த விழாவை வடிவமைத்திருந்தோம்.
ஆற்றின் நடுவே மேடை அமைக்கப்பட்டு அதில் தலைவர்கள் அனைவரும் நின்றிருந்தனர். வைகையின் சிறப்பினைப் பேசிமுடித்த பின்னர். எல்லோர் கையிலும் விளக்கினைத் தந்து ஒளியேற்றச் சொல்லி அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத பலரும் மேடையில் ஏறி விளக்குகளைக் கையில் எடுத்துக்கொண்டனர். கடைசியில் ஒருவிளக்கு மட்டுமே மிச்சம் இருந்தது. விழாத்தலைவரான அவரும் துணைத்தலைவரான நானும் நின்றிருந்தோம். ஆயிரக்கணக்கான விளக்குகள் ஒளிசிந்தும் அந்த அழகிய பொழுதில் ஒரு விளக்கை நாங்கள் இருவரும் ஒன்றாய்ப் பிடித்து நின்றோம்.
மதுரையின் வளர்ச்சிக்கான கனவுகளோடு தன்னை எப்பொழுதும் இணைத்துக்கொண்டவர் கருமுத்து தி. கண்ணன் அவர்கள். திருவிழாவும் கொண்டாட்டமும் நிறைந்த எமது மாமதுரைக்கான அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து சுடர்வீசும் அந்த விளக்கை வைகையின் நீரில் மிதக்கவிடுகிறேன். "உங்களின் நினைவு இம்மாமதுரையுடன் என்றென்றும் கலந்திருக்கும்".
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications