அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலை... புது ஏடிஎஸ்பி செந்தில் விசாரணையை தொடங்கினார்
விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் தற்கொலை தொடர்பாக ஏடிஎஸ்பி செந்தில் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நாமக்கல்: மோகனூரில் விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் தற்கொலை தொடர்பான விசாரணை தொடங்கியது. ஏடிஎஸ்பி செந்தில் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுப்பிரமணியன் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
நாமக்கல்லை சேர்ந்த கான்ட்ராக்டர் சுப்ரமணியன், அமைச்சர் விஜயபாஸ்கர், உள்பட பல அரசியல்வாதிகளுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். ஏப்ரல் 7ஆம் தேதி சுப்ரமணியம் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி வந்தார் சுப்ரமணியன். இந்த நிலையில் கடந்த 8ம்தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் சபரீஷ் மோகனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். சுப்பிரமணியன் வருமானவரித்துறை விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை எனில் வருமானவரித்துறை சோதனைக்கு பிறகு யாராவது அவரை மிரட்டினார்களா? என்ற கோணத்தில் மனைவி, மகனிடம் விசாரித்தார் இளங்கோ.
தற்கொலை வழக்கில் தீவிரமாக விசாரித்து வந்தார் இளங்கோ, இந்த நிலையில்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் விசாரணை அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி செந்தில், இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவிட்டு உள்ளார்.
மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் செந்திலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏடிஎஸ்பி செந்தில் தலைமையிலான போலீசார் இன்று முதல் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்பட்டது.
இந்த நிலையில் உடனடியாக தனது விசாரணையை தொடங்கியுள்ளார் செந்தில், செவிட்டுரங்கன்பட்டியில் சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்ட பண்ணை வீட்டில் பணியாளர்களிடம் விசாரணையை தொடங்கிய செந்தில், பணியாளர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.
சுப்ரமணியம் தற்கொலைக்கு முன்பாக கடைசியாக யாரிடம் பேசினார்? எதுவும் கொடுத்தாரா என்று கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் சுப்ரமணியத்தின் மனைவி, மகனிடம் விசாரணை நடத்த உள்ளார்.
சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்ட வழக்கு மிக முக்கியமான வழக்கு என்பதால் ஏடிஎஸ்பி செந்திலை விசாரணை அதிகரியாக நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications