ஜெ. ஜாமீன் 4 மாதத்துக்கு நீட்டிப்பு!: அப்பீலுக்கு தனி பெஞ்ச்- 3 மாதத்தில் முடிக்க சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை 4 மாதம் நீட்டித்துள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம், சிறப்பு அமர்வு ஒன்றை அமைத்து இன்று முதல் நாள்தோறும் விசாரித்து 3 மாதத்துக்குள் முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

Supreme Court to hear Jayalalithaa case today

1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு 18 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 27-ந் தேதி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்தார்.

ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயலலிதா உட்பட 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இதனிடையே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பெங்களூர் தனிநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

இந்நிலையில் அக்டோபர் 17-ந் தேதியன்று ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் டிசம்பர் 18-ந் தேதிக்குள் தாக்கல் செய்தாக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

மேலும் டிசம்பர் 18-ந் தேதிக்குப் பின்னர் ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தும் இருந்தது. இதன் பின்னர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையானார்.

இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவுக்கான ஒரு லட்சத்து 72 ஆயிரம் பக்க ஆவணங்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ரசீது பெறப்பட்டது. பின்னர் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச்சோ, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரப்பட்ட வழக்கின் விசாரணை டிசம்பர் 18-ந் தேதி நடைபெறும். அதற்கு 7 நாட்கள்தானே இருக்கிறது.. அன்றைய தினம் விசாரணை உறுதியாக நடைபெறும். மேல்முறையீட்டு வழக்கு குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

இன்றைய விசாரணை...

இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது.

அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி ஆஜரானார். அவர், கடந்த அக்டோபர் 17-ந் தேதி உத்தரவிட்டதைப் போல அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துவிட்டோம். இதனால் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நீட்டிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது உங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க எவ்வளவு கால அவகாசம் தேவை என்று வழக்கறிஞர் துளசியிடம் கேட்டனர். அதற்கு, நாங்கள் விரைவாக வாதங்களை முடித்துக் கொள்கிறோம் என்று வழக்கறிஞர் துளசி பதிலளித்தார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் உங்கள் கருத்து என்ன என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு, கடந்த வாரம் ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி இருந்த பாலிநாரிமனிடம் மேல்முறையீட்டு ஆவணங்களை எனக்கு தர உத்தரவிட்டிருந்தீர்கள். ஆனால் 177 வால்யூம்களைக் கொண்ட ஆவணங்களை எனக்குத் தரவில்லை. இந்த வழக்கு தொடர்பாக தமிழக- கர்நாடகா எல்லையில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன என்றார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சுப்பிரமணியன் சுவாமிக்கு 177 வால்யூம்கள் அடங்கிய ஆவணங்களை உடனே வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு வன்முறை சம்பவம் நடைபெற்றாலும் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்யலாம் என்றும் அனுமதி அளித்தனர்.

ஜாமீன் நீட்டிப்பு- சிறப்பு அமர்வு- 3 மாத அவகாசம்

மேலும், ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் வழங்கப்பட்ட இடைக்கால நிபந்தனை ஜாமீன் 4 மாதம் அதாவது ஏப்ரல் 18-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க ஒரு சிறப்பு அமர்வை கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். இந்த சிறப்பு அமர்வானது இன்று முதல் நாள்தோறும் விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+