நெல்லை மாவட்டத்தில் நிரம்பி வழியும் அணைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் சேர்வலாறு, கடனா, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் தற்போது 139 அடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர்மழை காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி உள்ளன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைக்கு பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, கடனா, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளன. இது தவிர மணிமுத்தாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் மளமளவென நிரம்பி வருகின்றன.
143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது. வெள்ளிக்கிழமை மாலையில் இது 139 அடியை தொட்டது. அணை பாதுகாப்பு கருதி 140 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. 118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 99.35 அடியாக இருந்தது. பிற்பகலில் நீர்மட்டம் 100 அடியை தொட்டது. 4 ஆண்டுக்கு பிறகு மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதை தொடர்ந்து பாபநாசம், மணிமுத்தாறு பாசன பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2010ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி பாபநாசம் அணை 134.15 அடியாகவும், சேர்வலாறு அணை 146.06 அடியாகவும், 17 ந்தேதி மணிமுத்தாறு அணை 99.05 அடியாகவும் உயர்ந்ததே அதிகபட்சமாகும்.
பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி இருப்பது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டத்தின் மொத்த குளங்கள் 2,449 ஆகும். நேற்றைய நிலவரப்படி இவற்றில் 2,218 குளங்கள் நிரம்பிவிட்டன. நல்ல மழைபொழிவு காரணமாக இந்த ஆண்டு 83 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று ராதாபுரத்தில் மட்டும் 40 மி.மீ மழை பதிவானது. மற்ற இடங்களில் பாபநாசம், சேர்வலாறு, நாங்குநேரி, குண்டாறு அணை ஆகிய பகுதிகளில் தலா ஒரு மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடியவிடிய கொட்டியது. தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் பலத்த மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதியில் விட்டு விட்டு சாரல் விழுந்தது. இந்த மழையால் உப்பளத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் 3 நாட்கள் இடைவிடாமல் மழை கொட்டியது. இடையில் 2 நாட்கள் மழை சற்று ஓய்ந்திருந்த மழை நேற்று மீண்டும் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கடந்த வாரமே நிரம்பிவிட்டன. தற்போது அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications