சுவாதி கொலை: ராம்குமாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை- போலீஸ் தீவிரம்
சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராம்குமார் அணிந்திருந்த சட்டையில் படிந்து இருந்தது சுவாதியின் ரத்தமே என்று சோதனையில் உறுதியாகியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி காலையில் ஐடி நிறுவன ஊழியர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
உண்மையான கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. அதில் சுவாதியின் தந்தையும், ரயில் நிலையத்தில் கேண்டீன் வைத்திருந்த நபரும் கொலையாளியை அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.
ராம்குமாரை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டு அவரது நீதிமன்ற காவல் அடுத்த மாதம் 1ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் ராம்குமாரிடம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராம்குமார் வாக்குமூலம்
எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும்தான் அவரை வெட்டினேன். நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

லேப்டாப், செல்போன்
சுவாதி அலுவலகம் மற்றும் வீட்டில் பயன்படுத்திய லேப்டாப், பிரின்டர், செல்போன் ஆகியவற்றில் உள்ள தகவல்களை பெறுவதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத் துக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். அதில் என்னென்ன தகவல்கள் கிடைத்தன என்பதை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

எழும் சந்தேகங்கள்
சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து அவரது செல்போனையும் கொலையாளி எடுத்து சென்றார். எனவே, யாருக்கோ தேவையான ஒரு தகவல் சுவாதிக்கு தெரிந்துள்ளது. அதை அவர் தனது லேப்டாப்பில் வைத்து இருந்திருக்கலாம். அந்த தகவல் வெளியே தெரியாமல் இருக்க சுவாதியை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு ராம்குமாரை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

சிபிஐ விசாரணை
சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் பெற்றோரும், அவரது தரப்பு வக்கீல்களும் ராம்குமார் கொலையாளி இல்லை. போலீசார்தான் ராம்குமார் கழுத்தை அறுத்தனர். எனவே, சுவாதி கொலை தொடர்பாக உண்மையான நிலை தெரிய வேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

தடையங்கள் சேகரிப்பு
மாநில போலீசார் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இது போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து ராம்குமார்தான் கொலையாளி என்பதற்கான அனைத்து வகையான தடயங்களையும் போலீசார் சேகரித்து முடித்துள்ளனர்.

வெட்டப்பட்ட அரிவாள்
முதல்கட்டமாக கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளை பறிமுதல் செய்தனர். அதில், கைரேகை பதியவில்லை. சுவாதியைக் கொலை செய்த அரிவாள் எங்கிருந்து வாங்கப்பட்டது? அதை விற்பனை செய்தவரின் வாக்குமூலம் என மிக தெளிவான விவரங்களோடு உள்ளன.

ரத்தக்கறை சட்டை
கொலை செய்யும்போது ராம்குமார் அணிந்திருந்ததாக கூறப்படும் ரத்தம் படிந்த சட்டையை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். அதை தடய ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். தற்போது அந்த ஆய்வு முடிந்து விட்டது. அதில் இருந்தது சுவாதியின் ரத்தம்தான் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் அறிக்கை
இந்த ஆய்வின் முழு விவரம் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுதான் ராம்குமார் கொலையாளி என்பதற்கு முக்கிய தடயம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு உதவியாக இருக்கும் எனவும் போலீஸ் தரப்பில் நம்பப்படுகிறது.

குற்றப்பத்திரிக்கை
சுவாதியின் தந்தை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடை வைத்திருந்தவர், மேன்ஷன் மேனேஜர் ராஜேந்திரன் அனைவரின் வாக்குமூலத்தையும் சேகரித்து அதற்கான ஆதாரங்களை வலுவாக்கி உள்ளனர். சுவாதி கொலை கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரித்து வருவதாகவும்,
இந்த குற்றப்பத்திரிகை சுவாதி கொலை தொடர்பாக நிலவும் சகல சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் என்கிறது போலீஸ் தரப்பு .












Click it and Unblock the Notifications