போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துவிட்டு மீண்டும் மயக்கமைடந்த ராம்குமார்
நெல்லை: சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சுயநினைவு திரும்பி, போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் பிறகு மயக்கமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவாதி கொலை வழக்கில், போலீசார் தன்னை, நெருங்கியதை உணர்ந்த நிலையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் ராம்குமார். உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் ராம்குமார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ராம்குமார் கழுத்தில் எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. மொத்தம் 10 இடங்களில் வெட்டு காயம் இருந்தபோதிலும், உயிருக்கு ஆபத்தில்லை என்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர்.
இதையடுத்து, ராம்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெட்டு காயங்களுக்கு தையல் போடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை ராம்குமார் சுய நினைவுக்கு திரும்பினார். காத்திருந்த போலீசார் அவரிடம், கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் வாங்கினர்.
போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சிறிது நேரத்தில் ராம்குமார் மீண்டும் மயக்க நிலைக்கே போய்விட்டார். எப்போது நினைவு திரும்பும் என அவரது, தந்தை, தாய், தங்கை உள்ளிட்ட குடும்பத்தார் ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறார்கள்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன், சித்தி அத்தியமுனவரா கூறுகையில், "கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் முழுமையாக குணமடைய 2 நாட்கள் ஆகலாம்.
ராம்குமார் தனது கழுத்து பகுதியில் ஆழ வெட்டியுள்ளார். எனவே பேச முடியாத நிலையில் உள்ளார். உயிருக்கு ஆபத்து என்று கூற முடியாது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். எனவே பிறகுதான் மற்ற விஷயங்களை சொல்ல முடியும்" என்றார்.


Click it and Unblock the Notifications
