9 மாவட்டங்களில் இன்று கொட்டும் கனமழை.. உங்கள் ஊர் இருக்கா? சென்னை நிலவரம் என்ன? வானிலை அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாளும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. அதோடு சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் எந்த மாதிரியான காலநிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடுப்பு கொடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றும் பல இடங்களில் மழை பெய்து குளுகுளு சீசன் நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விபரம் வருமாறு: தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இன்று எங்கெங்கு மழை: இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதகிளில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய நிலவரம்: நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மே 1ம் தேதி நிலவரம்: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 1ல் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதோடு அன்றைய தினம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்: இதுதவிர இன்று மதியத்தில் இருந்து அடுத்த 48 மணிநேரத்துக்கான சென்னை வானிலை நிலவரமும் கணித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 48 மணிநேரத்தில் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36.37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா-கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடலோர பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் 2 நாட்களும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications