'கள்', 'ஆவின் பால்', மும்மொழி கொள்கை முதல் 'மாப்பிள்ளை' வரை பரபரத்த தமிழ்நாடு சட்டசபை கூட்டம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் இன்று கள் மீதான தடையை நீக்குவது, ஆவின் பால் பொருட்களை கிராமங்களுக்கும் கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்த விவாதம் நடைபெற்றது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதும் விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான இன்றைய 2-வது நாள் விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்ப அமைச்சர்கள் பதிலளித்தனர்.

கள் மீதான தடை நீங்குமா?
கள் மீதான தடை நீக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ஒரு காலத்தில் பனங்கள், தென்னங்கள் மரத்தில் இருந்து இறக்கப்பட்டன; அப்போது தடை கிடையாது; கள் குடிக்க அனுமதி இருந்தது. ஆனால் அந்த பானங்களை போதைப் பொருளாகவும் மாற்ற சில பொருட்கள் கலந்தனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பனையில் இருந்து இறக்கும் போது கள் ஆகாது; அது பதநீர்தான்.. அதற்குதான் அனுமதி கேட்கப்படுகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, பதநீரை இறக்கும் போது சேர்க்க வேண்டியதை சேர்த்துவிட்டால் கள் ஆகிவிடும்; பனைபொருட்கள் இணையம், செயலிகள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
ஆவின் பொருட்கள்
ஆவின் பொருட்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அமெரிக்கர்களும் ஆவின் நெய்யைத்தான் விரும்புகின்றனர்; ஆவின் நெய் உலகத் தரம் வாய்ந்தது. ஆவின் பொருட்கள் அனைத்தையும் கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
'மாப்பிள்ளை' செந்தில் பாலாஜி
மின்சார துறை தொடர்பான கேள்வியை எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிப்பிடும் போது, 'மாப்பிள்ளை' என குறிப்பிட்டார். பின்னர் சாரி சாரி.. பழக்கதோஷத்தில் குறிப்பிட்டுவிட்டேன் என சொல்ல அதிமுக, திமுக உறுப்பினர்கள் இணைந்தே சிரித்ததால் சபையில் சிரிப்பலை ஓங்கி ஒலித்தது.
மும்மொழிக் கொள்கை- கவன ஈர்ப்புத் தீர்மானம்
இதன் பின்னர் மும்மொழிக் கொள்கை தொடர்பாக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. எழிலன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய எழிலன் எம்.எல்.ஏ, மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் இந்தியில்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். தமிழ் எழுத்தான ரூ என போட்டதற்கே ருத்ரதாண்டவம் ஆடுகின்றனர். இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் திணிக்க, பழக்க முயற்சிக்கிறது மத்திய அரசு என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், இந்தியை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசுகையில், இருமொழிக் கொள்கையால் கல்வித்தரம் உயர்ந்துள்ளது; உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசுகையில், எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் இந்தியை அனுமதிக்க மாட்டோம் என்றார்.
விசிக எம்.எல்.ஏ, ஆளூர் ஷா நவாஸ் பேசுகையில், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி மொழியைத்தான் திணிக்க முயற்சிக்கிறது என விமர்சித்தார்.
பாமக எம்.எல்.ஏ. ஜிகே மணி பேசுகையில், தாய்மொழியைவிட உயர்ந்த கொள்கை எதுவும் இல்லை. இந்தியாவில் ஆட்சி மொழியாகத் தமிழ் வர வேண்டும். மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை ஏற்று கொள்ளக் கூடியது இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications