சட்டசபை இன்று கூடுகிறது.. எம்.எல்.ஏக்கள் குதிரை பேர விவகாரத்தை கிளப்ப திமுக திட்டம்
தமிழக சட்டசபை இன்று காலை கூடுகிறது. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., வறட்சி, குடிநீர் பிரச்சினை, எம்.எல்.ஏ.க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினைகளை முக்கிய பிரச்சினைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு சட்டசபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. இதையடுத்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தை ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கூட்ட முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. மொத்தம் 24 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத்துறைகளுக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு சபை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். பிறகு வனம்- சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். இதனிடையே தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி பற்றி விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு தி.மு.க. ஏற்கனவே சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் ஆளும்கட்சி எம்எல்ஏக்களே ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்திருக்கிறார்கள். ஓபிஎஸ் தரப்பில் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக 32 பேர் உள்ளனர். மீதமுள்ளவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். சட்டசபையில் யார் என்ன பிரச்சினையை கிளப்புவார்களே என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., கலப்பட பால், குடிநீர் பிரச்சினை, வறட்சி, தமிழக சட்டசபையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்க எம்.எல்.ஏ.க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை, இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடை மீது தமிழ்நாட்டின் நிலைப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே சட்டசபையில் இன்று புயல்வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
