கண்ணீரும் கம்பலையுமாக ஓ.பி.எஸ்.பதவியேற்று 125 நாட்கள்....சாதனைகளும், சறுக்கல்களும்…!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் முதல்வர் ஆசியோடு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்சி நேற்றோடு 125 நாட்களை கடந்துள்ளது.

பன்னீர்செல்வத்தின் வாழ்க்கையை செப்டம்பர் 27க்கு முன் செப்டம்பர் 27க்கு பின் என்றவகையில் பிரிக்கலாம். நிதி, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானது செப்டம்பர் 27க்குப் பின்னர்தான்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகாலம் சிறைதண்டனை பெற்றதை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பதவியிழந்தார். ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து கொண்டிருந்த ஒரு கலவர காலத்தில் முதல்வராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர் செல்வம்.

செப்டம்பர் 29-ஆம் தேதி ஆளுநர் முன்னிலையில் கண்ணீரும் கம்பலையுமாக ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான ஆட்சி அமைந்து பிப்ரவரி 1ஆம் தேதியுடன் 125 நாட்களை கடந்துள்ளது. ஊடகங்கள்தான் அவரை தமிழக முதல்வர் என்று அறிவிக்கனவே தவிர அதிமுகவினர் யாரும் அவரை முதல்வராக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அதற்கு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின ஊர்வலத்தில் பெயரளவிற்குக் கூட ஓ.பன்னீர் செல்வத்தின் படம் இடம்பெறவில்லை.

முதல்வர் அறைக்கு

முதல்வர் அறைக்கு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, அவர் ஏற்கெனவே நிதியமைச்சராக பணியாற்றிய அறையிலேயே தற்போதும் அலுவல்களை கவனிக்கிறார். காலையில் தலைமைச் செயலகத்துக்கு வரும் முதல்வர், மாலை 5 அல்லது 6 மணிக்குதான் வீட்டுக்கு செல்கிறார். தினமும் சுமார் 8 மணி நேரத்துக்குமேல் தலைமைச் செயலகத்தில் இருந்து, அலுவல்களை மேற்கொள்கிறார்.

ஜெயலலிதா ஆலோசனையில்

ஜெயலலிதா ஆலோசனையில்

தலைமைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், அரசு ஆலோசகர்கள் மற்றும் துறை அதிகாரிகள் அன்றாட அலுவல் தொடர்பாக முதல்வரை சந்தித்துப் பேசுகின்றனர். அமைச்சர்களும் முதல்வரை தனித்தனியாக சந்திக்கின்றனர்.

முக்கியப் பிரச்சினைகளில் முடிவெடுப்பது குறித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைகளும் போயஸ் தோட்டத்தில் இருந்து முதல்வர் அலுவலகத்துக்கு பெறப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெடுபிடி இல்லை

கெடுபிடி இல்லை

முதல்வரின் வாகனத்துக்கு முன்னும், பின்னும் 2 பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே கான்வாயில் செல்கின்றன. வழிநெடுகிலும் போலீஸார் நிறுத்தப்படுவதில்லை.

தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பாதுகாப்பில் இருந்த அதிகப்படியான கெடுபிடி நிலை தற்போது இல்லை. பல்வேறு பிரச்சினைகளுக்காக தலைமைச் செயலகத்துக்கு மக்கள் மனு அளிக்க வருவது தொடர்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது. ஆனால், வெறும் 3 நாட்களில் கூட்டத்தை முடித்து, பிரச்சினைகளை சமாளித்தார் முதல்வர்.

மீனவர்கள் விடுதலை

மீனவர்கள் விடுதலை

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இது ஓ.பி.எஸ் ஆட்சியின் சாதனையா? மோடி அரசின் சாதனையா என்பதே இன்னமும் விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது.

 சுதந்திரமான முடிவுகள்

சுதந்திரமான முடிவுகள்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசுத்துறைகள் எப்படி செயல்பட்டு வந்ததோ, அந்த நிலைதான் இப்போதும் தொடர்கிறது. அரசு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், ஆய்வுக் கூட்டங்களை அமைச்சர்கள் சுதந்திரமாக நடத்தி முடிவுகளை எடுக்கின்றனர் என்பது தலைமைச் செயலக வட்டாரங்கள் தரும் தகவல்.

வேதனைகள் என்னென்ன?

வேதனைகள் என்னென்ன?

பதவியேற்ற சில வாரங்களிலேயே அக்டோபர் 25-ம் தேதி பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. டிசம்பர் 12 முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. ஓ.பி.எஸ்சின் 125 நாள் ஆட்சியை எதிர்கட்சியினர் என்ன சொல்கின்றனர் பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பன்னீர்செல்வம், முதலில் தன்னை முதல்வர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும். முதல்வருக்கான அறையிலேயே அவர் அமரவில்லை. அலுவலகம் மட்டுமன்றி அவரது வீட்டிலும் பெயர்ப்பலகை மாற்றப்படவில்லை. இது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறோம். புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. மொத்தத்தில் மக்களுக்கு எந்த நலனும் ஏற்படவில்லை என்கிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஒருவரை பாராட்டவோ விமர்சிக்கவோ வேண்டுமென்றால் அந்த நபர் எதையாவது செய்திருக்க வேண்டும். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் எதையுமே செய்யவில்லையே. பால் விலை, மின் கட்டணம்தான் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த 125 நாட்களில் எதுவுமே நடக்கவில்லை என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

பன்னீர்செல்வம் முதல்வரான நாளிலிருந்து இன்று வரை தமிழகத்தில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பன்னீர்செல்வம் தன்னை முதல்வராக சொல்லிக் கொள்ளவே தயங்குகிறார். புதிய திட்டங்களை அறிவிக்கவே பயப்படுகின்றனர். 125 நாட்கள் மட்டுமல்ல இன்னும் ஒரு வருடம் கழித்து கேட்டாலும் இதைத்தான் சொல்வேன் என்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

செயல்படாத அரசு

செயல்படாத அரசு

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனின் ஆதங்கமோ வேறுமாதிரியாக இருக்கிறது. ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைந்திருக்கும் மாநில அரசு செயல்படாத அரசாக உள்ளது. அவர் அதிகாரம் இல்லாத முதல்வராக செயல்பட்டு வருகிறார். பாக்ஸ்கான் தொழிலாளர்கள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும்போதும், மாநில அரசு செயல்படவில்லை.

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

ஜல்லிக்கட்டு உரிமையை பறிகொடுத்தது, கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை குறைத்தது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாதது, பால் விலை, ரூ.5,447 கோடிக்கு மின் கட்டணத்தை உயர்த்தியது, பருப்பு மற்றும் முட்டை கொள்முதலில் ஊழல் இவை எல்லாம் இந்த ஆட்சியின் அவலங்கள். ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்ட காரணம் தேடினால் எதுவுமே கிடைக்கவில்லை. மொத்தத்தில் இந்த 125 நாள் ஆட்சி அவலங்களின் உச்சம்.

ஓய்வு காலமா?

ஓய்வு காலமா?

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வந்த பின்னர் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா? என்ற கேள்விக்கு ‘குற்றங்கள் அதிகரிக்கவும் இல்லை; குறையவும் இல்லை' என்கின்றனர் காவல்துறையினர். காவல்துறையில் எந்த ஒரு மாறுதலும் காவல் துறையில் செய்யப்படவில்லை. அதிகாரிகள் பலர் இப்போது சீருடை அணியாமல் சாதாரண ஆடைகளில் அலுவலகம் வரத் தொடங்கியுள்ளனராம். போலீஸாருக்கு இது ஓய்வுகாலம் என்பதுபோல பலர் செயல்படுகின்றனராம். மொத்தத்தில் பல போலீஸ் அதிகாரிகள் சுதந்திரமாக சொந்தப் பணிகளை மட்டுமே எப்போதும் செய்கின்றனர் என்றனர்.

சந்திக்காத முதல்வர்

சந்திக்காத முதல்வர்

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று 125 நாட்களை எட்டியுள்ள நிலையில், இதுவரை ஒருநாள்கூட அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள்கூட பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+