பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள் நாங்களும் ஆள்வோம்- டிடிவி தினகரன் பஞ்ச்
பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள் நாங்களும் ஆள்வோம் என்று தஞ்சாவூரில் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார் டிடிவி தினகரன்.
தஞ்சாவூர்: ஆளப்போறான் தமிழன் என்று எந்த நேரத்தில் எழுதினார்களோ யாரைப் பார்த்தாலும் நாங்களும் ஆளுவோம் என்று கூறி வருகிறார்கள். ஆர் கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் அடிக்கடி இந்த வசனத்தை பேசி வருகிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு போன போதே பலருக்கு முதல்வர் கனவு இருந்தது. சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் ஜெயலலிதா. ஆனாலும் அசராமல், நான் முதல்வரானால் என்று 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பலரும் பகிரங்கமாக பேசினர். எல்லாரின் கனவிலும் ஆசிட் ஊற்றி அழித்து விட்டு டெபாசிட்டை காலி செய்ய வைத்து மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.

இந்த சாதனை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. ஐந்தே மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற ஜெயலலிதா வீடு திரும்பாமலேயே மரணமடைந்தார். அதன் பிறகு ஓபிஎஸ் முதல்வரானார். 40 நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. சசிகலா முதல்வராக ஆசைப்பட்டார் ஆனால் ஜெயில்தான் என்று விதி சொன்னது.
சசிகலாவினால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, அப்படி இப்படி என்று தனது ஓராண்டு சாதனையை கொண்டாடி விட்டார். இதற்குக்தான் டிடிவி தினகரன் கமெண்ட் அடித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது இது சாதனை விழா அல்ல. சோதனை விழா என்று கூறியதோடு இது கொடுங்கோல் ஆட்சி என்றும் சித்தரித்துள்ளார்.
இந்த ஆட்சி விரைவில் கவிழும். 10, 20 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களையும், அவர்களது குடும்பத்தையும் வைத்து கொண்டு ஓராண்டு நிறைவு செய்து சாதனை விழா நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி என்று கூறிவரும் இந்த ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சியாக செயல்படுகிறது.
கர்நாடக அரசு தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்று தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்டா பகுதியில் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. குறிப்பாக தமிழகத்திற்கு 90 சதவீத நிதி கிடைக்கவில்லை. இதை பற்றி தமிழக அரசும் வாய் திறந்து பேசவில்லை.
திராவிட ஆட்சியில் தான் தனிமனித வருமானம் அதிகமாக இருந்தது. இதனால்தான் மத்திய அரசு வழங்க கூடிய நிதியை குறைத்துள்ளது.
சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது தவறு. நீதிமன்ற தீர்ப்பிலும் இது தவறு என்று தான் வரப்போகிறது. சில டெக்னிக்கல் விஷயத்திற்காக ஸ்லீப்பர் செல்கள் வெளியே வராமல் இருக்கிறார்கள். வாக்கெடுப்பு நடக்கும் போது கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் பேசி அதிர்ச்சியூட்டினார்.
இந்த ஆட்சி விரைவில் கவிழும் மதவாத சக்திகளோடு எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம். பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள் நாங்களும் ஆள்வோம் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன். அது எப்போது என்றுதான் அவரால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
ஜெயலலிதா மரணத்திற்கு முன்பு ஆட்சி அதிகாரம் என்று பேச யாருக்குமே தைரியம் இருந்திருக்காது. அவரது மரணத்திற்குப் பின்னர், சிஸ்டம் பற்றி பேசிய ரஜினி அரசியல்வாதியாகிவிட்டார். ட்விட்டரில் கருத்து கூறிய கமல் கட்சி ஆரம்பித்து விட்டார். எங்கேயோ பதுங்கியிருந்த டிடிவி தினகரன் ஆர் கே நகர் எம்எல்ஏவானதோடு இப்போது முதல்வர் கனவிலும் மிதந்து வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் இன்னும் எத்தனை முதல்வர்களை பார்க்கப் போகிறார்களோ?












Click it and Unblock the Notifications