எழுந்து வணக்கம் வைக்காததால்... இளைஞரின் கையை வெட்டிய பஞ்சாயத்துத் தலைவியின் கணவர்!
மதுரை: தான் நடந்து வந்தபோது எழுந்து மரியாதையாக நிற்காமல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் என்பதற்காக 17 வயது இளைஞரின் கையை வெட்டி காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளார் மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவியின் கணவர்.
இந்த வெறித்தனமான ஜாதி வெறிச் செயல் அப்பகுதியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கிராமம் சிறுவானூர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகன் கார்த்திக். 17 வயதான இவர் தனது வீட்டு திண்ணையில் சம்பவத்தன்று உட்கார்ந்திருந்தார்.
அப்போது அந்தப் பக்கமாக பஞ்சாயத்துத் தலைவி தேவியும், அவரது வீட்டுக்காரர் கிருஷ்ணனும் நடந்து வந்துள்ளனர். அபப்போது கார்த்திக் எழுந்து அவர்களுக்கு வணக்கம் வைக்கவில்லையாம். இதனால் கோபமடைந்த கிருஷ்ணன், ஏன் நாங்கள் வரும்போது எழுந்து நிற்கவில்லை என்று கேட்டு கார்த்திக்கிடம் தகராறு செய்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. கிராமத்தினர் புகுந்து தடுத்து அமைதிப்படுத்தினர். கிருஷ்ணன் கடும் கோபமாக இருந்ததால் தனது மகனுக்கு ஆபத்து வரும் என்று எண்ணிய கார்த்திக்கின் தாயார், அவரை சில நாட்கள் சிவகங்கைக்குப் போய் தங்கி இருந்து விட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
கார்த்திக்கும் சிவகங்கைக்குக் கிளம்பினார். வழியில் கிருஷ்ணன், அவரது சகோதரர்கள் கண்ணன், குமார் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர். அருகில் உள்ள புதருக்குள் இழுத்துச் சென்று அவரது இடது கையை வெட்டித் துண்டாக்கியுள்ளது இந்த ஜாதி வெறிக் கும்பல்.
கை துண்டானதால் ரத்தம் கொட்டக் கொட்ட மயங்கி விழுந்தார் கார்த்திக். பின்னர் அந்தக் கும்பல் ஓடி விட்டது. இதைப் பார்த்த கிராம மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கார்த்திகைத் தூக்கிச் சென்றனர்.
அங்கு கார்த்திக்கைப் பரிசோதித்த டாக்டர்கள், துண்டிக்கப்பட்ட கையை இன்னும் ஒரு மணி நேரத்தி்ற்குள் கொண்டு வந்தால் மீண்டும் சேர்க்க முடியும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து ஒரு குழு துண்டித்த கையை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால் கையை வெட்டிய கொடூரர்கள், அதை எங்கேயோ போட்டு விட்டுப் போய் விட்டதால் அதைத் தேட முடியவில்லை. இரவு 7 மணியளவில்தான் கை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் கால தாமதமாகி விட்டதால் கையை மீண்டும் இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வெறிச் சம்பவம் தொடர்பாக முக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications