நிறுத்து, எல்லா டப்பிங் சீரியல்களையும் நிறுத்து..... ஆக. 14ல் தமிழ் டிவி கலைஞர்கள் உண்ணாவிரதம்!
சென்னை: தமிழ் சேனல்களில் டப்பிங் சீரியல்கள் வரவை கண்டித்து சென்னையில் சின்னத்திரை நடிகர், நடிகைகள், வருகிற 14ந்தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழ் டிவி சேனல்களில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்புவது அதிகரித்து வருகின்றன. ராஜ் டிவி, பாலிமர் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி என பிரபல தொலைக்காட்சி சேனல்களில் இந்தி டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
புதுயுகம் டிவி சேனலில் கொரியன் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகி ஹிட் அடித்து வருகின்றன.

டப்பிங் சீரியல்
தமிழ் சேனல்களில் டப்பிங் சீரியல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நேரடி தமிழ் சீரியல்களை ஒளிபரப்பி வந்த சன் டிவியும் டப்பிங் சீரியலை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டது. இதனால் பல நெடுந்தொடர்கள் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.

வேலை இழக்கும் அபாயம்
ஜவ்வாய் இழுத்து போரடிக்கும் தமிழ் சீரியல்களை சீக்கிரம் முடித்துவிடும்படி சீரியல் தயாரிப்பாளர்களை வற்புறுத்த தொடங்கி உள்ளது. இதனால் தமிழ் சீரியல்களை நடிக்கும் நடிகர் நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் சின்னத்திரை கலைஞர்கள்
டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை கண்டித்தும், தமிழ் சீரியல்களுக்கு மக்களிடம் ஆதரவு வேண்டியும், சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்புள்ள அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

உண்ணாவிரதம்
ஆகஸ்ட் 14ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு பிரமாண்ட உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

திரைக்கலைஞர்கள் ஆதரவு
போராட்டத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். பல திரைப்பட சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications