ரசிகர்கள் போல் வந்து சென்னை சேப்பாக்கம் மைதானம் திடீர் முற்றுகை- தவாக நிர்வாகிகள் கைது!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை ரசிகர்கள் போல் வந்து திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. காவிரிக்காக போராடி வரும் நிலையில் அதை திசை திருப்பும் நிகழ்வாக ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனினும் இன்று திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறவுள்ளன.

பாம்பு வந்தால்
ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என்றும் ரசிகர்களோடு ரசிகர்களாக சென்று மைதானத்தை முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் மைதானத்துக்குள் பாம்பு புகுந்தாலோ அல்லது வெளியே வரும் வீரர்களுக்கு அசம்பாவிதம் நடந்தாலோ நாங்கள் பொறுப்பல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

திடீரென முற்றுகை
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தை ரசிகர்கள் போல் வேடிக்கை பார்க்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்றனர். அப்போது திடீரென மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கைது
அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தை சுடுகாடாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே யாரும் ஐபிஎல் போட்டிகளை காண மைதானத்துக்கு வரக் கூடாது.

காண வேண்டாம்
ஐபிஎல் போட்டிகளை காண்பித்து இளைஞர்கள் போராடுவதை கைவிட வைத்து போதையில் வைத்திருக்க மத்திய அரசு விரும்புகிறது. அதற்குதான் இந்த ஐபிஎல். எனவே யாரும் மைதானத்துக்கு சென்று போட்டிகளை காண வேண்டாம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications