கலர்புல் டிரஸ்.. கலக்கல் ஹேர்ஸ்டைல்.. எல்லாம் சரி... அதிரடி அரசியலுக்கு சரிபட்டு வருவாரா மஹாலட்சுமி
தமிழக பாஜக தலைவராக மகாலட்சுமி பெயரும் அடிபடுகிறது
சென்னை: இன்னொரு அக்கா தமிழகத்துக்கு வரப் போகிறார் போல.. மதுரை லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள் இவரை.. பாஜக மகளிரணி தலைவர் மஹாலட்சுமிதான் அவர்! கலர்புல் டிரஸ், ஹேர்ஸ்டைல், தடாலடி பேச்சு.. போன்றவற்றில் தென்மாவட்டங்களை கலக்கி வருகிறார் இந்த பாசக்கார அக்கா.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளவர்தான் மஹாலட்சுமி.. மதுரையை சேர்ந்தவர்.. பாஜகவில் ஐக்கியமானவர்.. மாநில மகளிரணி தலைவர்.
பிரதமரின் மாநிலமான குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.. சௌராஷ்டி சமூகத்தை சேர்ந்தவர்.. நிறைய பட்டங்களை பெற்றிருக்கிறார். சுயஉதவி குழுக்களை வைத்து எத்தனையோ ஏழை பெண்களுக்கு உதவி வருகிறார்.

ஆதரவு
பாஜக பெயர் பரிசீலனையில் உங்க பேர் இருக்கிறதே என்று கேட்டால், "கட்சியில் 22 வருஷமா இருக்கேன்.. என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.. அது கட்சிக்குத்தான் ஆதரவை பெற்று தருகிறது.. இந்த பதவிக்கு பல தலைவர்கள் என் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார்கள். பார்க்கலாம்" என்கிறார் நம்பிக்கையோடு.

ஆதரவு
சௌராஷ்டிரா மக்கள் பாஜகவை தீவிரமாக ஆதரிப்பார்கள்.. சௌராஷ்டிராத்தை சேர்ந்தவர் அந்த சமூகம் சார்ந்த கவலை இவருக்கு இருக்காது.. எப்படியும் அமோக ஆதரவு தெரிவிப்பார்கள்.. ஆனால் பிற சமூகத்தினர் இதனை ஏற்று கொள்வார்களா என தெரியவில்லை.

மஹாலட்சுமி
ஏனெனில் டாக்டர் தமிழிசை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.. பாஜகவினரால் எந்த குறையையும் சொல்ல முடியாதவர்.. அந்த அளவுக்கு ஒரு ஆதரவை மஹாலட்சுமியும் மொத்தமாக பெறுவாரா என தெரியவில்லை. அது மட்டுமல்ல, விரைவில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. அதனால் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தை, கூட்டணி, சீட் பேரம் இதெல்லாம் தமிழக பாஜகவுக்காக இவரால் முன்னின்று பேச முடியுமா என தெரியவில்லை.

துணிச்சல்
இது போக, வலிமை பொருந்தி வரும் திமுகவை சமாளிக்க வேண்டி இருக்கும்.. தக்க பதிலடியை அவர்களுக்கு தர வேண்டி இருக்கும்.. தமிழிசை இப்படித்தான் செய்தார்.. முக ஸ்டாலினுக்கு நேரம் காலம் பார்க்காமல் அதிரடி ட்வீட் போட்டு திணறடித்தார். அந்த தைரியமும், துணிச்சலும், எந்த நேரத்திலும் நிதானத்தை, கண்ணியத்தை இழக்காத மரியாதையான பதிலடிகளையும் தமிழிசையை போல இவரும் தருவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தன்னம்பிக்கை
அதே நேரம் இவரது பேச்சுக்களும், தன்னம்பிக்கை மிகுந்த பதிவுகளும் மிகவும் ஈர்க்கும் விதமாகவே உள்ளன.. குறிப்பாக, வெற்றிக்கான படிகள் என்ன என்பதையும் ஒரு லிஸ்ட் போட்டு காட்டுகிறார். "முதலாவது படி - தோல்வி, இரண்டாவது படி - அவமானம், மூன்றாவது படி - கடின உழைப்பு, நான்காவது படி - தன்னம்பிக்கை, அடுத்தடுத்த படிகள் - விடாமுயற்சி, கடைசி படி - வெற்றி" என்கிறார் மகாலட்சுமி.

உதவிகள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு இவர் நன்றாக செலவு செய்கிறாராம்... தனிப்பட்ட முறையில் லட்சக்கணக்கில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தாலும், கட்சி தலைவர்களால் இவர் கூர்ந்து கவனிக்கப்படுவதையும் மறுக்க முடியாது.

தடாலடி லேடி
எப்படியும் தமிழிசை இடத்தை இவர் நிரப்புவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.. தமிழிசை போலவே தடாலடி லேடியாக இவர் இருக்கிறார்.. இவரை பார்ப்பதற்காகவே கட்சி நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் கூட்டம் வருகிறது என்றுகூட சொல்கிறார்கள். தென்மாவட்டங்களில் அதிரடி காட்டும் இந்த லேடி சூப்பர் ஸ்டார் விரைவில் தமிழக பாஜக தலைமைப் பொறுப்புக்கு வருவாரா? பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications
