மக்கள் 'நலனுக்காக' வெறும் 25% மட்டுமே டிக்கெட் கட்டணம் உயர்வாம்... அரசின் அடடே விளக்கம்!
மக்கள் நலனுக்காக திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசு 25 சதவீதம் மட்டுமே டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : மக்களுக்கு சுமையை கூட்டாமல் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று 25 சதவீதம் என்ற அளவிலேயே சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி அமலாக்கப்பட்ட பின்னர், திரைத்துறைக்குக் கூடுதலாக 10 சதவிகிதம் கேளிக்கை வரி தமிழகத்தில் விதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாத இறுதி முதல், இந்தக் கூடுதல் வரிவிதிப்புமுறை அமலாகும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அரசின் கூடுதல் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கூட்டாக அறிவித்தன.

ஆலோசித்து முடிவு
இந்நிலையில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவது குறித்த அறிவிப்பை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து உயர்மட்ட குழுவினர் திரைத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பல்
வீடியோ பைரசி, தியேட்டர்களை நடத்துவதில் இருக்கும் அதிக செலவீனங்கள், படத்தயாரிப்புக்கான கேளிக்கை வரி 20 முதல் 30 சதவீதமாக உயர்ந்தது உள்ளிட்டவற்றை திரைத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜிஎஸ்டி வரியும் அறிமுகப்படுத்தப்பட்டதால் தியேட்டர்களை நடத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு அனுமதி
எனவே பொதுமக்களின் நலன் கருதியும், மாநல அரசின் நிதிக்சூழல் மற்றும் திரைத்துறையினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் விலை உயர்வு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டிக்கெட் கட்டணத்தை தற்போதைய விலையை விட 25 சதவீதம் கூட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

ரூ. 10 தான் தொடக்க விலையே
இதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ. 10க்கும், ரூ. 10ல் இருந்து ரூ. 15க்கும் அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதே போன்ற ரூ. 7, ரூ. 5 மற்றும் ரூ. 4 கட்டணம் வசூலிக்கும் தற்போதைய குறைந்தபட்ச கட்டணங்கள் ரூ. 10 என்று திருத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications