தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி ஏற்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்
வேலூர்: ‘நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணத்தின் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி ஏற்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முக.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது;
தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை தி.மு.க.வினரை விட அ.தி.மு.க.வினரே பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இதனை தடுக்க அதிமுக. பல சூழ்ச்சிகளை செய்த போதும் வெற்றிகரமாக எனது பயணத்தை தொடர்ந்து வருகிறேன். இது தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க தி.மு.க. ஆட்சியின் போது கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றது.
இதையடுத்து, ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு எவ்வித பணிகளையும் செய்யாமல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை முடக்கி வைத்தது. தற்போது 2016-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை அதிமுக விரைந்து செயல்படுத்தி வருகிறது.
தமிழக மக்கள் மிகவும் தெளிவுடன் இருக்கின்றனர். ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
இத்திட்டங்கள் தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதை நமக்கு நாமே பயணத்தின் போது என்னால் உணர முடிந்தது. இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி ஏற்பட்டுள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள். நமக்கு நாமே திட்டம் தான் அனைத்து தரப்பு மக்களிடமும் பேசப்படுகிறது.
தமிழகத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் தவித்து வரும் நிலையில் அதனை கண்டு கொள்ளாமல், முதல்வர் ஜெயலலிதா கொடநாடுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டார்.
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருவது போல ஜெயலலிதா பொதுமக்களை சந்திக்க தயாரா? அல்லது அமைச்சர்கள் யாராவது பொதுமக்களை நேரில் சென்று சந்திக்க தயாராக உள்ளனரா? வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்த பொதுமக்கள் தயாராகி விட்டனர், என்றார்.


Click it and Unblock the Notifications
