தீபாவளி முடிந்தது... மீண்டும் துவங்கியது மழை.. 24 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை!
சென்னை: இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழகத்தில்பரவலாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தில் எடுத்த எடுப்பிலேயே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மழை தொடங்கியதுமே நான்கு நாட்களுக்கு விடாமல் வெளுத்துக் கட்டியது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தொடக்க மழையின் அளவானது 2 மடங்கு அதிகமாகவே இருந்தது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வந்தது. சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நேற்று முன்தினம் முதலே மழையின் அளவு குறைந்தது. இதனால் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டின. அவ்வப்போது லேசான தூறலாக மழை, பின்னர் வெயில் என மாறி மாறி இருந்தது. நேற்று பகலில் பெரிய அளவில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லை. இதனால் பட்டாசு வெடிப்போர் பெரும் மகிழ்ச்சி அடைந்து வெடித்துத் தள்ளினர்.
ஆனால், தமிழகத்தின் சில தென் மாவட்டங்களில் விடாது பெய்த மழையால், தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க முடியாமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசம் மற்றும் தூத்துக்குடியில் 9 செ.மீ, குன்னூரில் 8 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு அருகே வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக, சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நகரமே குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
