இதுதான் மாமா.. இது அத்தை.. இது சித்தப்பா.. இது யாரு சொல்லு!
சென்னை: குழந்தைகளிடம் உறவுகளைச் சொல்லி வளர்க்கும் பழக்கம் இன்று குறைந்து போய் விட்டது.
தமிழைப் போல ஒரு அழகான மொழி வேறு இருக்குமா என்று தெரியவில்லை. அத்தனை உறவுகளுக்கும் அது அழகான பெயர்களை வைத்துள்ளது. அதை பயன்படுத்துவதைத்தான் தமிழர்களாகிய நாம் மறந்து போய் விட்டோம்.
முன்பெல்லாம் பக்கத்து வீட்டில் உள்ளோரை, அண்ணா, அக்கா, மாமா, சித்தப்பா, அத்தை என்று உரிமையோடு கூறி அழைப்போம். இன்று எல்லாமே அங்கிள், ஆண்டி என்று குறுகிய வார்த்தைகளுக்குள் சுருங்கிப் போய் விட்டது. உறவுகளும் கூடத்தான் அருகிப் போய் விட்டன. பக்கத்து வீட்டில் வசிப்போர் யார் என்று கூட பலருக்குத் தெரிவதில்லை.

உறவுகளைச் சொல்லி
அந்த அளவுக்கு கூட்டுக்குள் சிக்கிய பறவையாக மாறிப் போய் விட்டது நமது வாழ்க்கை முறை. குழந்தைகளிடம் இந்த மாதிரி இருக்காமல் உறவுகளைச் சொல்லி வளர்க்க வேண்டும். அதில் நிறையப் பேர் தவறி விடுகிறோம். பக்கத்து வீட்டு அத்தை உனக்கு இனிப்புக் கொடுத்தாங்கம்மா என்று குழந்தையிடம் சொன்ன காலம் போய் பக்கத்து வீட்டு ஆன்ட்டி உனக்கு இனிப்புக் கொடுத்தாங்க என்கிறோம்.

ஆங்கிள் ஆன்ட்டி எதற்கு
தமிழுக்கு அமிழ்து என்றுப் பெயர்.அந்த தமிழ் மொழியில் உறவுகளை அழைக்காமல் அங்கிள் ஆன்ட்டி என்று அழைக்கிறோமே அந்த வார்த்தையிலேயே உங்களுக்கு அன்னியம் தெரியவில்லையா. வீட்டில் உங்கள் பிள்ளைகள் அம்மா அப்பா என்று உளமார அழைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி மம்மி டாடி என்று அழைத்துப் பாருங்கள். அவை உங்கள் உறவுகளை நெருக்கமானதாக ஆக்குகிறதா என்று.

அங்கிளோட கசின்
எனது நண்பர் ஒருவருடன் ஒரு நபர் வந்திருந்தார் என்னைப் பார்க்க வந்தபோது. நான் இவர் யார் என்று என் நண்பனிடம் கேட்டேன். அதற்கு அவர் இவர் என் அங்கிளோட கசின் என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றேன். அதற்கு அவர் என் மாமாவினுடைய தங்கையின் மகன் என்றார். நீங்களே சொல்லுங்கள் இந்த உரையாடலில் அங்கிள் என்பது பெரியப்பா சித்தப்பா மாமா இந்த உறவுகளில் யாரைக் குறிக்கிறதென்று.

முற்றிலும் தவறு
அங்கிள் ஆன்ட்டி என்று அழைப்பது நாகரிகம் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஒரு சிறு குழந்தையிடம் இருபது வயது இளைஞனைக் காட்டும் போதும் அங்கிள் என்று அழைக்கச் சொல்கிறோம். எண்பது வயது தாத்தாவாக இருந்தாலும் அங்கிள் என்று தான் அழைக்கின்றனர். தமிழில் உறவுகளைக் குறிக்க எத்தனையோ பெயர்கள் இருக்க ஏனோ இந்த அங்கிள் ஆன்ட்டியை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

உறவுகளோடு அழையுங்கள்
உங்கள் குழந்தைகள் அங்கிள் ஆன்ட்டியை விட்டு விட்டு மாமா அத்தை சித்தப்பா சித்தி பெரியப்பா என்று உறவுகளை உளமார அழைக்கக் கற்றுக் கொடுங்கள். இவ்வாறு அழைப்பதன் மூலம் உறவுகளுக்குள் ஏற்படும் நெருக்கத்தை நாம் உணர முடியும். மேலும் நமது மொழியில் ஒவ்வொரு உறவுக்கும் எப்படியெல்லாம் அழகழகாக பெயர் வைத்துள்ளனர் என்பதையும் அவர்களுக்கு உணர்த்த முடியும். உறவுகளை மறக்காமல் இருப்போம்.. உணர்வுகளோடு வளர்வோம்.












Click it and Unblock the Notifications