டாஸ்மாக்குக்கு விடுமுறை: பிளாக்கில் சரக்கு விற்க முயன்ற ஊழியர்கள் கைது
கரூர்: பிளாக்கில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கிய டாஸ்மாக் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் குடிமகன்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்ய டாஸ்மாக் ஊழியர்களே மது பாட்டில்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கரூர் மாவட்டம் ரெட்டி பாளையம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முனியப்பன், விற்பனையாளர் முருகானந்தம், தயாநிதி ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு கடையில் இருந்து மது பாட்டில்களை கடத்திச் சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசாரிடம் கடத்தி வந்த மதுபாட்டில்கள் பிடிபட்டன. இதனால் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 85 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுக்காலியூர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சசிகுமார், அதன் பார் உரிமையாளர் சத்தியசீலன் ஆகியோர் காரில் மதுபாட்டில்களை ஏற்றயுள்ளனர். அப்போது, அங்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து 240 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதுபோல வெங்கமேடு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சிங்கார வேலன், அவரது தம்பி பிரபு ஆகியோர் காரில் மது பாட்டில்களை கொண்டு சென்றபோது, போலீசார் மடக்கி கைது செய்து 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குடிமகன்களை கண்காணிக்க கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications