ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: ம.ந.கூ ஆதரவை கோருகிறது ஓபிஎஸ் அதிமுக!
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் ஆதரவை கேட்க முடிவு செய்துள்ளது ஓபிஎஸ் அதிமுக.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் ஆதரவை கோர ஓபிஎஸ் அதிமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை ஓபிஎஸ் அதிமுகவினர் இன்று சந்திக்க உள்ளனர்.
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் வென்று தாங்களே உண்மையான அதிமுக என நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது ஓபிஎஸ் அணி. இதனால் வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து வருகிறது.

ஆர்கே நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என கூறி வருகிறது ஓபிஎஸ் அணி. இதனிடையே ஆர்கே நகர் தொகுதியில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என மக்கள் நலக் கூட்டணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தற்போது மக்கள் நலக் கூட்டணியின் ஆதரவு கோர ஓபிஎஸ் அதிமுக திட்டமிட்டுள்ளதாம்.
இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களை ஓபிஎஸ் அதிமுக தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்கே நகரில் தனித்து போட்டியிடும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications