தென்காசியில் 3 பேரை கொடூரமாக கடித்து குதறிய கரடி மரணம்.. பிரேத பரிசோதனை சொல்வது என்ன?
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 3 பேரை ரத்த காவு வாங்கிய கரடி மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிபட்டு வனத்தில் விடப்பட்ட நிலையில் இது இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையம் அருகே உள்ள சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வியாபாரத்திற்கு சென்றிருந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே திடீரென ஒரு கரடி வந்தது. அவரது இரு சக்கர வாகனத்தை மறித்து கரடி நின்றதால் வைகுண்டமணி வாகனத்தை நிறுத்தினார். அப்போது அருகே வந்த கரடி அவர் சுதாரிப்பதற்குள் அவரை கீழே தள்ளி கடித்து குதறிக் கொண்டிருந்தது.

அலறல் சப்தம்
அப்போது இவரது அலறல் சப்தத்தை கேட்ட பொது மக்கள் அந்த இடத்திற்கு ஓடி வந்தனர். வைகுண்டமணியை கரடி கடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். அப்போது அந்த கரடியானது அவர்களையும் கடித்தது. பெத்தான்பிள்ளை குடியிருப்பை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்தது.

3 பேருக்கும் படுகாயம்
இதில் 3 பேருக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சை
இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கரடி கடித்து 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுயில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்றைய தினம் பிடித்தனர். பிறகு அதை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

கரடி மரணம்
இந்த நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட கரடி தற்போது உயிரிழந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அந்த கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த கரடியின் உடல் களக்காட்டில் எரிக்கப்பட்டது. கரடிக்கு ரத்தக் கசிவு, நுரையீரல் பிரச்சினை இருந்ததால் அது இறந்ததாக வனத் துறையினர் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications