பாஜக கூட என்னைக்கு இருந்தோம், கதவைச் சாத்துவதற்கு.. தம்பிதுரை நக்கல்!
Recommended Video

புதுக்கோட்டை: பாஜகவுடன் நாங்கள் அரசு ரீதியிலான கூட்டணியையே வைத்துள்ளோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட திருநல்லூர் எருதுபட்டி தெற்கு எருதுபட்டி கோத்திராபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மனுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பாஜகவுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணி என்பது கிடையாது. பாஜக கூட்டணியில் இருந்து இருந்தால் ஜிஎஸ்டி முத்தலாக் ஆகியசட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கமாட்டோம். ஆனால் திமுக தான் எப்படியாவது பாஜகவுடன் கூட்டணி அமைக்க துடிக்கிறது.
அதற்காக தான் அமித்ஷாவை அழைத்து வர திட்டமிட்டனர். அதிமுகவில் கருத்து சுதந்திரம் உள்ளது. நான் பேசுவது என்னுடைய சொந்த கருத்து. அதிமுக 2016ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டது. கூட்டணி வைத்து அல்ல. ஜெயலலிதா வழியைதான் பின்பற்ற உள்ளோம். கூட்டணி குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக எந்த சட்ட சிக்கலும் இல்லை. ஆகையால் ஆளுனர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு என்பது இல்லை. நிலக்கரியை கையிருப்பு வைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் மக்களவை துணை சபாநாயகர் என்ற முறையில் நானும் மத்திய அரசிடம் பேசியுள்ளேன்.
அதிமுக சட்டவிதிகள் திருத்தம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இரட்டை இலை சின்னம் மற்றும் கொடி மற்றும் அதிமுக ஆகியவை எங்களிடம் உள்ளது. அந்த நிலை எப்போதும் தொடரும். தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications