ரஜினியை நம்பி நாங்கள் இல்லை.. தமிழகத்தில் பாஜக தானாக வளரும்… தமிழிசை பலே பல்டி!
நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது என்ற விமர்சனத்தை 200 சதவீதம் மறுப்பதாக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது 'ஆதாயத்திற்காக சிலர் அணுகும் போது ஆதரிப்பதில்லை' என்று கூறினார். இது குறித்து பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது:

ரஜினி வாய்ஸ்
ரஜினிகாந்தை சந்திப்பது ஆதாயத்திற்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. 1996ல் ஒரு கூட்டணிக்காக அவர் ஆதரவு கொடுத்தார். அன்று ஒரு கூட்டணிக்காக வாய்ஸ் கொடுத்தவர் இன்று தனக்காக ஒரு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

வரவேற்பு
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது வரவேற்கத்தக்கது. அரசியலில் ஒரு தூய்மைத் தன்மையை கொண்டு வர வேண்டும் என்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கு என்ற ஒரு கட்டமைப்பு வேண்டும். தனி நபரால் மட்டுமே அது சாத்தியமா என்பது கேள்விக் குறி.

குறுகிய நோக்கம்
ரஜினியை வைத்து தமிழகத்தில் காலூன்ற பாஜக நினைக்கிறது என்ற விமர்சனமே 200 சதவீதம் தவறு. நாங்கள் எங்களது கட்டமைப்பை பலப்படுத்தி அதன் மூலம் பலம் பெற நினைக்கிறோம். பாஜக ரஜினிக்கு மரியாதை கொடுத்திருக்கிறது. மரியாதை நிமித்தமாக சந்திப்பதை ஆதாயத்திற்காக சந்திப்பது என்பது குறுகிய வார்த்தைக்குள் அடக்கி விடுவது சரியாக இருக்காது. ரஜினியும் அந்த நோக்கத்தில் அதனை சொல்லி இருக்க மாட்டார்.

மரியாதை நிமித்தம்
கங்கை அமரன் ரஜினியை சந்தித்த பின்னர் சில கருத்தை வெளியிட்டார். அதனை மறுத்து ரஜினி சில மறுப்புகளை தெரிவித்த போது எங்களுக்கு சங்கடமாக இருந்தது. கலைத்துறையை சார்ந்தவர் என்ற முறையில்தான் கங்கை அமரன் ரஜினியை சந்தித்தார் என்று தமிழிசை கூறினார்.












Click it and Unblock the Notifications