பனையூர் பாபு அணுகிய போது திமுக என்ன சொல்லியிருக்க வேண்டும்? வலியில் பேசிய திருமாவளவன்
தருமபுரி: பனையூர் பாபுவை திமுகவில் இணைத்ததன் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பலப்படுத்த முயற்சி செய்து அவர்கள் ஏமாந்து போனார்கள் என கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
தருமபுரியில் நடந்த திருமண விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், நான் ஒரு போதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தது கிடையாது.

சிலர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும், சிதறடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் இப்போது மாற்றமடைந்திருக்கிறார்கள்.
ஒருவர் நம் கட்சிக்கு வருகிறார் என சொன்னால், அவர்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும், "திருமாவளவன் எங்களுடைய நீண்ட கால நண்பர், அவர் எங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த கட்சி இன்று இல்லாவிட்டாலும் என்றாவது தேவை, நீங்கள் எங்கள் கட்சிக்கு வர வேண்டாம்" என சொல்லியிருக்க வேண்டும்.
அதுதான் அரசியல் அறம். எங்களாலும் விசிகவை பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் அவரை கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இயக்க எடுத்த ஒரு முடிவு என் இதயத்தில் முள் குத்தியதை போல் வலியை கொடுத்தது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான கருத்தியல் சார்ந்த படை தளபதிகள் வலிமையுடனும் அன்புடனும்தான் இருக்கிறார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அது போல் திருவண்ணாமலையில் விசிக சார்பில் நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாட்டு அரசியலில் நாம் குறி வைக்கப்படுகிறோம் என்பதை கட்சியின் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் எங்கே இருந்தாலும் அந்த இடத்தில் எப்போதும் நேர்மையாகவே இருந்திருக்கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் கொடுத்த போட்டியின் முன்னும் பின்னும் வெட்டிவிட்டு திமுக கூட்டணி தொடர்கிறது என்பதை மட்டும் ஒளிபரப்புகிறார்கள்.
திமுக கூட்டணியில் இருந்த போது தவெகவின் அரசியல், கருத்துகள் முரணாக இருந்ததால் விமர்சித்தது உண்மைதான். ஆனால் ஆட்சி அமைப்பதற்கு நெருக்கடியான ஒரு சூழலில் அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அவர்கள் நம்முடன் உறவை விரும்பும் போது நாமும் அந்த உறவை தக்க வைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
திமுக தலைமையிலான கூட்டணி ஏன் நிலைக்கவில்லை என்பதை ஒரு சுயவிமர்சனமாக, சிந்தனைக்காக நான் முன் வைக்கிறேன். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மிக வேகமாக வெளியேறி தவெகவிற்கு ஆதரவு கொடுக்கும் அளவு அந்த உறவு ஏன் கசந்து போனது என்பதை திமுக தலைவர்கள் யோசிக்க வேண்டும்.
நாம் அமைச்சரவையில் சேர்ந்ததால்தான் கூட்டணி முறிந்தது என சிலர் கூறுகிறார்கள். நாம் எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற முடியும். அதில் நமக்கு பெரிய பிடிப்பு இல்லை. ஆனால் இருக்கிற இடத்தில் விசுவாசமாக இரு என கூறுபவர்கள் நம்மை சுதந்திரமாக சிந்திக்க விடாமல் ஒரு அடிமையாகவே பார்க்கிறார்கள்.
திமுக தவெக என அனைத்து கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என நான் சொன்னால் அதை யாரும் பாராட்ட மறுக்கிறார்கள். நான் மீண்டும் திமுகவுடன் ஒட்டிக் கொள்ள பார்ப்பதாக விமர்சிக்கிறார்கள்.
தேர்தலுக்காக மோதி கொள்ளலாம், ஆனால் பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதுதான் எனது விருப்பம். பாஜக நேரடியாக வந்தால் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது என தெரிந்து, அவர்கள் வேறு முகத்தோடு உள்ளே நுழையப் பார்க்கிறார்கள். "வி த லீடர்ஸ்" என்று புதிய அமைப்பை தொடங்கிய அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகுவதற்குக் கடிதம் கொடுத்துவிட்டு, டெல்லியில் மோடி, அமித்ஷாவின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தார்.
உலகத்தில் எந்த அரசியல் கட்சியிலாவது விலகல் கடிதத்திற்கு ஒப்புதல் வரக் காத்திருந்த வரலாறு உண்டா? அண்ணாமலை போன்ற ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்கள் வளர்ந்தால், டெல்லியில் கெஜ்ரிவாலுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கும் நடந்த நிலைதான் தமிழகத்தில் ஏற்படும்.
இதனால்தான் நான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நிற்க முடிவு செய்திருந்தேன். தற்போது விசிகவை திமுகவிற்கும் தவெகவிற்கும் எதிரானவர்களாக ஆக்க பார்க்கிறார்கள்.
அன்புமணி உள்ளே வந்தால் திருமா வெளியே போய்விடுவார் என வதந்தி பரப்புகிறார்கள். திருமாவளவன் முன்பு போல் ஸ்டெடியா இல்லை என்கிறார்கள். விசிகவையோ திருமாவளவனையோ யாராலும் பலவீனப்படுத்த முடியாது, அரசியலில் இருந்து வெளியேற்றவும் முடியாது. இவ்வாறு திருமாவளவன் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications