கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா 10 லட்சம்.. யானை தாக்கி இறந்தா வெறும் 2 லட்சமா.. கொந்தளிக்கும் தமிழிசை
தென்காசி: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாயை அறிவித்த திமுக அரசு, திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயை மட்டும் வழங்கியுள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சங்கரன்கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர்கள் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது ஆத்தூர், ஏல் பாலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அது இதுவரை சரி செய்யப்படவில்லை.

அதேபோல, மழை, வெள்ளம் போன்ற காலங்களில் திருச்செந்தூருக்குச் செல்ல சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மகாராஷ்டிர தேர்தலைப் பொருத்தவரை நல்ல ஆட்சிக்கும், நல்ல வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். பிரதமரின் நல்ல திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தரும் காலம் வெகுதொலைவில் இல்லை.
எனவே, வரும் 2026 தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக அமையும். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கத்திக்குத்து, தஞ்சாவூரில் ஆசிரியருக்கு கத்திக்குத்து, ஒசூரில் வழக்கறிஞருக்கு நீதிமன்ற வளாகத்திலேயே கத்திக்குத்து என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
அதேபோல, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை உண்மையான குற்றவாளிகள் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை. பாஜகவை பொருத்தவரை ஊழல் என்ற பேச்சுக்கு எப்போதும் இடமில்லை. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் அறிவித்தது திமுக அரசு.
ஆனால், திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்தால் ரூ. 2 லட்சம் மட்டுமே வழங்குகிறது. பட்டாசு தொழிலில் உயிரிழந்தவர்கள், விவசாயிகள் என பாதிக்கப்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குறைந்த நிதியே வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவிலுக்கு சென்று பார்த்தால் தான் யானைக்கு என்ன பிரச்னை என்று தெரியும்.
திராவிடம் என்று கூறிக்கொண்டு முதல்வர் கோவில் குடமுழுக்குக்கு கூட செல்வதில்லை. மாநில அரசிடம் இருந்து கிடைக்கும் வருவாயைவிட அதிகமான நிதி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் அதனை வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு தான் மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் மக்கள் பதிலை கூறியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications