பூக்களைத் தூக்கிப் போடுங்க... பிடிங்க ‘கரப்பான்பூச்சி’யை... 2016ன் சிறந்த காதலர் தின பரிசாம்!
சென்னை: இன்னும் காதலர் தினத்திற்கு இரண்டு தினங்களே இருக்கிறது. காதலர்கள் தங்கள் துணைக்கு பரிசுகளை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டு காதலிக்கு மலர்கள், மற்ற பரிசுகளுக்குப் பதிலாக, கரப்பான்பூச்சியை வாங்கி பரிசளியுங்கள் என்கிறது அமெரிக்காவிலுள்ள விலங்கியல் பூங்கா ஒன்று.
என்னது கரப்பான்பூச்சி பரிசா என ஆச்சர்யமாக இருக்கிறதா, மேற்கொண்டு படியுங்கள் புரியும்.

அரிய வகை கரப்பான்பூச்சி...
நியூயார்க்கில் உள்ளது ப்ரானக்ஸ் விலங்கியல் பூங்கா. இங்கு அரிய வகை கரப்பான்பூச்சிகள் உள்ளன. அந்தக் கரப்பான்பூச்சிகளைத் தான் காதல் பரிசாக வாங்கிக் கொள்ளும்படி அந்த விலங்கியல் பூங்கா தெரிவித்துள்ளது.

நகல்..
ஆனால், கோடிக்கணக்கில் கரப்பான்பூச்சிகளை விற்பனை செய்ய முடியாது அல்லவா. எனவே, அதற்கு மாற்றாக கரப்பான்பூச்சி நகல்களை விற்கிறது இந்த பூங்கா.

ஸ்வீட் எடு... கொண்டாடு
10 டாலர் செலுத்தினால் கரப்பான்பூச்சியின் நகல் கிடைக்குமாம். கூடுதலாக 15 டாலர் செலுத்தினாலும் நகலுடன் சேர்த்து பிரபல சாக்லேட்டும் கிடைக்கிறது.

ஆன்லைனிலும் விற்பனை...
இந்த வித்தியாசமான பரிசினால் ஈர்க்கப்பட்டு அமெரிக்கர்கள் வரிசையில் நின்று கரப்பான்பூச்சியை வாங்கிச் செல்கின்றனர். காதலர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சில இணையதளங்களிலும் இந்த கரப்பான்பூச்சிகள் விற்கப்படுகின்றன.

சொந்தக் காசில் சூனியம்...
ஆனால், இந்த கரப்பான்பூச்சி பரிசு நம்மூருக்கு ஒத்து வருமா எனத் தெரியவில்லை. நம்மூர் பெண்கள் பாத்ரூமில் ஒரு கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயந்து, அலறி மயக்கம் போட்டு விடுவார்கள். இதில், காதல் பரிசாக கரப்பான்பூச்சியை தருவது, சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வது மாதிரி தான்.












Click it and Unblock the Notifications