கோர்ட் படியேறிய 'புருவ புயல்' பிரியா வாரியர்.. அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
Recommended Video

சென்னை: புருவ புயல் பிரியா வாரியர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்று உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருபவர் பிரியா வாரியர். இவர் நடித்துள்ள "ஒரு அடார் லவ்' என்ற மலையாள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தத் திரைப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது.
'மாணிக்ய மலராய பூவி' என்ற அந்தப் பாடலில், பிரியா பிரகாஷ் பள்ளி மாணவி வேடத்தில் நடித்திருந்தார்.

புருவ புயல்
தனது சகமாணவன் கதாப்பாத்திரத்துடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல் இருந்தது. அதில் புருவத்தை வளைத்து இவர் செய்யும் சேஷ்டை மற்றும் கண்ணடிப்பு காட்சிகள் வைரலாக மாறி தேசிய அளவில் புகழை பெற்றுக்கொடுத்தன. இந்நிலையில், அவருக்கு எதிராக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள ஃபலக்னாமா காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி, காதலர் தினத்தன்று ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மத உணர்வுகள்
பிரியா வாரியர் நடித்த அந்தப் பாடலின் வரிகள் முஸ்லிம் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மெக்காவின் ராணிபோல வாழ்வார் என்ற அர்த்தத்தில் பாடல் வரிகள் இருப்பதே குற்றச்சாட்டுக்கு காரணம். இதுதவிர, அந்தப் பாடலை யூடியூப்பில் இருந்து நீக்கக் கோரி, பிரியா பிரகாஷுக்கு எதிராக மும்பையில் குற்றவியல் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

கோர்ட் படியேறிய பிரியா வாரியர்
இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நடிகை பிரியா பிரகாஷ் நேற்று மனு தாக்கல் செய்தார். "ஒரு அடார் லவ்' படத்தின் பாடல் வரிகளை கேரளாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் பாடி, கொண்டாடி வருகின்றனர். எந்தவிதக் காரணமுமின்றி முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது கருத்துரிமையை முடக்கும் செயல். இதுபோன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

நம்பிக்கையில் நெட்டிசன்கள்
இதனிடையே, பிரியா வாரியர் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுள்ளது உச்சநீதிமன்றம். நாளை விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியபோது, படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடைகளை உச்சநீதிமன்றம் விலக்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. எனவே "ஒரு அடார் லவ்" படப்பாடலுக்கும் எந்த பிரச்சினையும் வராது என நம்பிக்கையில் உள்ளனர் இளம் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications
