கொள்ளையடிச்ச ஜோரோடு... ஹீட்டர் போட்டு குளித்து விட்டு ஹாயாக போன திருட்டுப் பசங்க
சென்னை: சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிக் கொண்டனர். பின்னர் பாத்ரூமுக்குள் புகுந்து ஹீட்டரை போட்டு நன்றாக ஆசை தீரக் குளித்து விட்டு படு கேஷுவலாக வெளியேறியுள்ளனர்.
இந்த குசும்புக்கார திருடர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
வேளச்சேரி ஜகன்நாதபுரம் முதல் மெயின்ரோட்டில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் பாஸ்கரன் (63). ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு வாரத்துக்கு முன்பு பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று வீடு திரும்பினார்.
உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த 2 லேப்டாப், ஒரு ஐபாட், 2 கேமரா, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 3 சவரன் நகை, ஏடிஎம் கார்டு, பட்டுப்புடவைகள், நிலப்பத்திரம், பாஸ்போர்ட் ஆகியவற்றை ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
தகவலறிந்து வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில் பால்கனி வழியாக வந்து வீட்டில் புகுந்து கொள்ளையடித்ததும், மழை நேரத்தில் வந்ததால் பொருட்களை கொள்ளையடித்த பின்னர், குளியலறைக்கு சென்று ஹீட்டர் போட்டு குளித்து விட்டுத் தப்பியதும் தெரிய வந்தது.
தாங்கள் கொண்டு வந்த ரெயின் கோட்டையும் போட்டு விட்டுப்போயுள்ளனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு 12 லட்சம் என கூறப்படுகிறது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications