தேமுதிக, தமாகா விலகுவதால் ம.ந.கூட்டணிக்கு பாதிப்பில்லை... சொல்வது திருமாவளவன்
சென்னை: தேமுதிக, தமாகா கட்சிகள் விலகினால் மக்கள் நலக் கூட்டணிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தேர்தல்களை தனியாக சந்திக்கும் அளவுக்கு தமாகாவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கூறினார். இதனால் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமாகா விலகுவது உறுதியானாது.
மேலும் சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்வதாக விஜயகாந்த் அறிவித்தார் என அக்கட்சி நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.

தேமுதிகவும் விலகியது
இதனால் தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்ட்டது. மதிமுக நடத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் நலக் கூட்டணியில் தலைவர்கள் அனைவரது பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் விஜயகாந்த் பெயர் அதில் இடம்பெறவில்லை.

மநகூ அங்கம் அல்ல
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேமுதிகவும், தமாகாவும் மக்கள் நலக்கூட்டணியின் அங்கம் கிடையாது. மக்கள் நலக்கூட்டணியில் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் மட்டுமே உள்ளன.

ஜஸ்ட் தேர்தல் உடன்பாடு
எங்கள் அணியோடு, தேமுதிகவும், தமாகாவும் தேர்தலுக்காக தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டன. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் எப்படி போட்டியிட வேண்டும் என்று முடிவெடுப்பது அவர்களின் உரிமை.

லோக்சபா தேர்தலுக்கு வந்துடுங்க...
தேமுதிகவும், தமாகாவும் விலகினால் மக்கள் நலக்கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்றும் யுக்தியை அவர்கள் லோக்சபா தேர்தலிலும் பின்பற்றக்கூடாது என்பது எங்கள் விருப்பம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications