அரசர் போட்ட தப்புக்கணக்கு.. தரமான சம்பவத்தை நிகழ்த்திய ராகுல் காந்தி.. நிம்மதியில் திமுக!
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எந்தவித மாற்றமும் இல்லை என்றுதான் கட்சியின் கடைக்கோடி தொண்டன் முதல் கட்சித் தலைமை வரை அப்படித்தான் நினைத்திருந்தனர். எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை தனது பதவிக்கு எவ்வித ஆபத்தும் வராது என்றே திருநாவுக்கரசரும் நம்பினார். ஆனால் அவரது கூட்டல் கழித்தல் கணக்குகளே இறுதியில் அவருக்கு ஆப்பு வைப்பதாக அமைந்துவிட்டதுதான் சோகம்.
தமிழக காங்கிரஸ் தலைவராக 2016-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசர் மீது ஆரம்பத்தில் இருந்தே கட்சியில் கடுமையான அதிருப்தி நிலவி வந்தது. பாஜகவிலிருந்து வந்தவருக்கு இன்னமும் பாஜக மீதான பாசம் போகவில்லை என்ற குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த நிலைமையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்களாக இருந்த மாவட்ட தலைவர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவரையும் மாற்றிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமித்தார். அன்றிலிருந்து இளங்கோவனுக்கும் அரசருக்கும் ஏழாம் பொருத்தம் தொடங்கியது. ஊடகங்கள் வாயிலாக இருவரும் மோதிகொண்டனர்.

அரசரைப் பற்றி ஏராளமான புகார்கள் டெல்லி தலைமைக்கு பறந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையில் நடிகை குஷ்பு அரசருக்கு எதிராக கிடைத்த சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டினார். இப்படி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவர் மீதான எதிர்ப்பும் வெறுப்பும் கட்சிக்குள்ளும் தலைமையிலும் வளர்ந்த வண்ணமே இருந்தது. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் வரை தலைமையில் மாற்றம் செய்தால் அது தேர்தல் பணிகளை பாதிக்கும் என்றே தலைமை கருதியது.
இந்த நிலையில் அடிப்படையில் அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் திராவிட எண்ணங்களும், எம்.ஜி.ஆர் மீதான மரியாதையும் அவரிடம் எப்போதுமே இருந்தே வந்தது. எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில் சத்தியமூர்த்தி பவனிலேயே அவரது படத்துக்கு மரியாதை செய்தது காங்கிரஸ்காரர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. நிலைமை இப்படியே நீடித்துக் கொண்டிருக்க அரசருக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி அமைவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. அவர் தினகரன், பாமக, கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோரை ஒன்றிணைத்து புதிய கூட்டணியை ஏற்படுத்தலாம் என்றும் அதில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் புதிய கூட்டல் கழித்தல் கணக்குகளை போட துவங்கியிருந்தார். அதோடு எக்காரணம் கொண்டும் தினகரனை விட்டுவிட அவரது சாதிப்பாசம் விடவில்லை என்றும் கூறப்பட்டது.

இதை தெரிந்த கொண்ட திமுக தலைமை அப்போதுதான் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தனது காங்கிரஸ் விசுவாசத்தை காட்டிக் கொண்டது. இது அரசருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதன் பிறகு தேர்தல் பணிகளை துவக்கிய அரசர் தேர்தல் பணிக்குழு, பிரச்சாரக் குழு ஆகியவற்றை அமைத்தார். இந்தக் குழுக்களில் திமுக அனுதாபிகள் என்று கருதப்படும் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அதோடு இன்னும் இளங்கோவன் உள்ளிட்டவர்களுக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ பொறுப்பு கொடுக்கவில்லை. காங்கிரஸ் எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்களை இது இன்னமும் கடுப்பு ஏற்ற அவர்கள் மீண்டும் ப.சிதம்பரம், இளங்கோவன், ஸ்ரீ வல்ல பிரசாத், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரோடு டெல்லி சென்று திருநாவுக்கரசர் மீது புகார் பட்டியல் வாசிக்க தலைமையை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டாராம் ராகுல்.
இது ஒருபுறம் என்றால் அவர் பதவிக்கு வந்த நாளில் இருந்தே திமுகவுக்கும் இவருக்கும் சுமூகமான உறவு நிலை இல்லை. நடந்து முடிந்திருந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சரியாக தேர்தல் வேலை செய்திருந்தால் தன்னுடைய மகன் தேர்தலில் வென்றிருப்பார் என்பதுவும் காங்கிரஸ் இன்னும் சில இடங்களை வென்றிருக்கும் என்பதுவும் அவரது கணக்கு. அதன் பிறகே திமுகவின் கூட்டங்களில் திருநாவுக்கரசர் பெரும்பாலும் தலை காட்டுவதில்லை. இதெல்லாம் திமுக தலைமையை கடும் கோபம் அடையச் செய்தது. அதோடு தினகரனிடம் இவர் காட்டிய நெருக்கம் திமுக தலைமையை இன்னும் கோபம் அடையச்செய்ய காங்கிரஸ் தலைமையை மாற்றியே ஆகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் தேர்தல் முடியும்வரை மாற்றம் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்த ராகுலும் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளார். விளைவு திமுக தலைவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரும், ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளருமான கே எஸ் அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலை பொருத்தமட்டில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் அந்த இடங்களில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் திமுக தலைமையின் அனுமதியின் பேரில்தான் நிறுத்தப்படவேண்டும் என்ற நிபந்தனைகள் திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டபோது அதை காங்கிரஸ் தலைமையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இப்போது கே எஸ் அழகிரி நியமிக்கப்பட்டிருப்பது எல்லாவற்றிற்கும் வசதியாக போய்விட்டது. ஆக திருநாவுக்கரசரின் கூட்டல் கழித்தல் கணக்குகளே அவருக்கு ஆப்பாய் வந்து விட்டது.












Click it and Unblock the Notifications