திமுகவுடனான கூட்டணிக்கு குட்பை சொல்லும் திருநாவுக்கரசர்!
சென்னை: திமுக உட்பட எந்த ஒரு கட்சியுடனுமான கூட்டணியுமே ஆயுட் கால கூட்டணி இல்லை என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அதிரடியாக கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றிவிட்டு தமாகாவை சேர்க்க ஸ்டாலின் தரப்பு முயற்சித்தது. ஆனால் கனிமொழி தரப்போ கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என உறுதியாக இருந்தது. திமுக தலைவர் கருணாநிதியும் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என விரும்பினார்.
இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் காங்கிரஸுக்கு மிக குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் திடீரென முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார்.

மீண்டும் அப்பல்லோ
அப்போது ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு 2-வது முறையாக திருநாவுக்கரசர் சென்று வந்தார்.

திமுகவுக்கு எதிர்ப்பு
அத்துடன் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கருணாநிதி, ஸ்டாலின் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்து பேட்டியும் அளித்து வருகிறார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக பக்கம் காங்கிரஸ் சாய்வதாக கூறப்பட்டு வந்தது.

திருநாவுக்கரசர் விளக்கம்
இந்த சர்ச்சை குறித்து தி இந்து நாளேட்டுக்கு திருநாவுக்கரசர் அளித்துள்ள பேட்டி:
திமுக - காங்கிரஸ் உறவு எப்போதும் போலத்தான் உள்ளது. அதில் எந்தச் சிக்கலும் இல்லை.

உள்ளாட்சியில் மோதல்
உள்ளாட்சியில் சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்குக் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும். இத்தனை இடங்களை பிரித்துக் கொள்வதற்கு தலைவர்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே, இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸுக்கு திமுக அதிக இடங்களை ஒதுக்கியது. சென்னை மாநகராட்சியில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளதால், தொகுதிக்கு தலா 1 வார்டு என்ற அடிப்படையில் 22 வார்டுகள் கேட்டோம். அவர்கள் 14 கொடுத்தனர். பேச்சுவார்த்தை சுமூகமாக எட்டப்படாத இடங்களில் காங்கிரஸ், திமுக என இரு தரப்புமே வேட்பு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும்போது திமுகவுடன் பேசுவோம்.

தவிர்த்தது இதனால்தான்..
ராகுல் காந்தியின் பயணம் அரசியல் சார்பின்றி முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணமாகவே இருந்தது. உடல்நலம் சரியில்லாத முதல்வரை பார்க்க வரும்போது அரசியல் கூடாது என்று அவர் கூறினார். அதனால்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் விமான நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு வரவில்லை. தமிழக தலைவர் என்ற முறையில் நான் மட்டுமே சென்றேன். முதல்வரை பார்த்துவிட்டு திமுக தலைவர் கருணாநிதியை பார்த்தால், அது அரசியல் சமநிலையை ஏற்படுத்தும் செயலாக அமைந்துவிடும் என்றே அவர் தவிர்த்தார்.

ஒரே மாதிரி பேசனுமா?
நான் வேறு கட்சி. ஸ்டாலின் வேறு கட்சி. நாங்கள் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் பொறுப்பு முதல்வர் பிரச்சனையில் ஒரே கருத்தை சொல்ல வேண்டுமா என்ன? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அடிப்படையில் தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் தேவையில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதே, நேரத்தில் நிர்வாகம் நன்றாக நடக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

ஆயுட்கால கூட்டணி இல்லை
இன்றைய நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில், எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி கிடையாது. ஏனென்றால், முன்பு திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். பின்னர், கூட்டணி இல்லாமல் இருந்திருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருக்கிறோம். அவ்வளவுதான்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.












Click it and Unblock the Notifications