மின்வேலியில் சிக்கி மாணவர் பலி - மாட்டைத் தேடிச் சென்ற போது பரிதாபம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கரும்புத் தோட்டத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள பழையனுரைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் வரதராஜன் (19), திருத்தனி அரசு கலைக்கல்லுரியில் முதலாமாண்டு படிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்குச் சென்ற வரதராஜன் வீட்டு மாடு, இரவாகியும் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து, அன்றிரவு மாயமான மாட்டைத் தேடி கஜேந்திரன் மற்றும் குப்பன் என்பவர்களுடன் வரதராஜனும் சென்றுள்ளார்.
ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் மூவரும் மாட்டைத் தேடினர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டுப் பன்றிக்காக தோட்டத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்வேலியில் மூவரும் சிக்கினர். இதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப் பட்ட வரதராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications