ஜெ. உடல் அடக்கம் செய்யப்படவுள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் குவியும் அதிமுக தொண்டர்கள்
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படவுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவின் உடலடக்கம் செய்யப்படவுள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். அசம்பாவிதம் ஏதுவும் ஏற்படாத வகையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார்.

அரசியல் தலைவர்களும், அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி ஹாலில் தேசிய கொடி போர்த்தப்பட்ட அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என அனைவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
அதே போன்று தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னை ராஜாஜி ஹாலை நோக்கி திரண்டு கொண்டிருக்கிறார்கள். மேலும், அவரது உடல் இன்று மாலை எம்.ஜி.ஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்படுவதால் அந்த இடத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் காமராஜர் சாலை முழுவதும் அதிமுகவினர் மயமாகவே காட்சி அளிக்கிறது.
ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் எம்.ஜி.ஆர். சமாதியில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிடாத வகையில் போலீஸார் பெருமளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுக்க போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications