கிருஸ்துமஸ் கொண்டாட்டம்: வேளாங்கண்ணி, சென்னையில் கோலாகலம்
நாகப்பட்டினம்: கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இயேசு பிறந்த நாள் உலகெங்கும் கிருஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வழிபாட்டில் பல ஆயிரம் கிருஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டதால், தமிழ், இந்தி மலையாளம், கொங்கனி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பிராத்தனை நடத்தப்பட்டது.

சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையார் தேசிய திருத்தலத்தில் நள்ளிரவு நடைபெற்ற ஜெபவழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இயேசுவின் சீடர்களின் ஒருவரான தோமையாரின் பெயரில் உருவானது சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையார் பேராலயம். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இந்த தேவாலயத்தில் மிகப்பிரமாண்டமாக குடில்கள் அமைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தலைமை பாதிரியாரின் முன்னிலையில் நடைபெற்ற ஜெபவழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து குழந்தை இயேசுவின் பிறப்பையும் வாழ்க்கை வரலாற்றையும் உணர்த்தும் விதமாக பாடல்கள் இசைக்கப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை வழங்கி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
கிருஸ்துமஸ் விழாவின் அடையாளமாக பார்க்கப்படும் கிருஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் பார்வையாளர்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதே போல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அலங்கார மாதா ஆலயத்திலும் கிருஸ்துமஸ் கூட்டு வழிப்பாடு நடைபெற்றது. புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஏராளமான வெளிநாட்டினர், அங்கு கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதுச்சேரி கடற்கரைச்சாலை அருகில் உள்ள தேவாலயத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு தமிழ் என மூன்று மொழிகளில் வழிபாடுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டினர் ஒன்று கூடி கிருஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


Click it and Unblock the Notifications
