இன்னொரு பகீர்... இன்னொரு ஷாக்... பஸ்ஸையும் கடத்த ஆரம்பித்து விட்டார்களே மாணவர்கள்!
மாநகர பேருந்தை கடத்த முயன்ற 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சில காலேஜ் பசங்க, படிக்கிற வேலைய தவிர மீதி எல்லா வேலைலயும் இறங்கி அசிங்கப்பட்டு போறாங்க. கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான், முதல்நாள் கல்லூரிக்கு போன மாணவர்களிடமிருந்து உருட்டுக்கட்டை, அரிவாள்கள் என பயங்கரமான ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், சுமார் 50-,க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தார்கள்.
இந்த செய்தி அடங்கி ஓய்ந்து போவதற்குள் இன்னொரு பகீர்... இன்னொரு ஷாக்... இதுவும் சென்னையிலதான் நேற்று முன்தினம் நடந்திருக்கு. மாணவர்கள் போதை பொருட்களை கடத்தி, வாகனங்களை கடத்தி, இளம்பெண்களை கடத்தி.. இப்போ ஒரு படி மேல போய் பஸ்ஸையே கடத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் மாநகர பஸ்ஸை.
மதியம் 2 மணி இருக்கும். 24 சி என்ற பேருந்து திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தினுள் சில பேர் இருந்தனர். அமைந்தகரை கல்லூரி நிறுத்தம் வந்ததும் பேருந்து நின்றது. மேலும் சிலர் அதில் ஏறியதும், பேருந்து செல்ல முற்பட்டது. திடீரென்று 150 மாணவர்கள் புயல் போல பேருந்தை நோக்கி ஓடிவந்தனர். மூச்சிறைக்க வந்தவர்களில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்துக்குள் சர்சர்ரென ஏறினர். நேராக டிரைவரிடம் போய் அவரை ரவுண்டு கட்டிக் கொண்டனர்.

வண்டியை எங்கயும் நிறுத்தாதே
"நாங்க சொல்ற வரைக்கும் பஸ்சை எங்கேயும் நிறுத்தக்கூடாது. போய்க்கிட்டே இருக்கணும்."என மிரட்டினர். இதனால் அதிர்ந்து போன கண்டக்டரும் டிரைவரும் அவர்களிடம் இதெல்லாம் வேண்டாம், தயவு செய்து கீழே இறங்குங்கள் என கேட்டு கொண்டனர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து மிரட்டி பேருந்தை கடத்தி சென்றனர். 12 பைக்குகளில் வந்த 30-க்கும் மேற்பட்டோர் பேருந்து வேறு திசையில் எங்கும் போய்விடக்கூடாது என்று பேருந்தின் முன்னாலேயே சென்று கொண்டிருந்தனர். அதனால் டிரைவரால் வேறு பாதையில் வண்டியை திருப்பவும் முடியவில்லை. பேருந்துக்கு உள்ளேயும் ஆட்கள், வெளியேயும் ஆட்கள். இது போதாதென்று பேருந்தின் மேல்புறத்தில் மாணவர்கள் ஏறிக் கொண்டனர்.

ஜன்னல் கம்பிகளில் தொங்கினர்
போய் சும்மா உட்கார்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை. பேருந்தின் மேற்கூரையை தட்டி தட்டிதாளம் போட்டு, கத்தி இரைச்சலிட்டு கொண்டே வந்தனர். தாளம் தட்டி கூரையின் ஒரு பகுதியையே அடித்து சேதப்படுத்தினார்கள். சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்த பெண்கள், டூவீலர் ஓட்டி சென்ற பெண்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அசிங்கமாகவும், கீழத்தரமாகவும் கிண்டல் செய்தபடி வந்தனர். இதில் ஒரு சிலர் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கிக் கொண்டு பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார்கள். இதனிடையே அண்ணாநகர் பேருந்துநிறுத்தம் வந்துவிட்டது. பேருந்தினுள் இருந்த பயணிகளில் ஒருசிலர் இறங்க தயாரானார்கள். ஆனால் அவர்களையும் மாணவர்கள் இறங்கவிடவில்லை. "வண்டியை நிறுத்தக்கூடாதுன்னு சொன்னோம் இல்லை?" என்று சொல்லி, எந்த பேருந்து நிறுத்தத்திலும் வண்டியை நிறுத்தவும் இல்லை. பயணிகளை இறங்கவும் விடவில்லை. ஏறவும் விடவில்லை.

பஸ்சை நான் ஓட்டறேன்
இவ்வளவும் நடந்த பிறகு கண்டக்டர் தனது செல்போன் மூலம் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், "வண்டியை அங்கேயே ஓரம் கட்டுங்கள். நாங்கள் வந்துவிடுகிறோம்" என்று பதிலளித்தனர். அதன்படியே டிரைவர் பேருந்தை ஓரங்கட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் உடனே பேருந்தை எடுக்கும்படி பழையபடி மிரட்டினர். முடியாது என்று டிரைவர் மறுத்துவிட்டார். இதனால் ஒரு மாணவர், "நீ ஓட்டாவிட்டால் என்ன, நானே ஓட்டறேன்" என்று பேருந்தை ஓட்ட முயன்றார். அப்போது தூரத்தில் போலீசார் வந்து கொண்டிருப்பதை பேருந்தின் கூரைமேல் உட்கார்ந்திருந்தவர்கள் பார்த்துவிட்டார்கள். அவ்வளவுதான், உள்ளே, வெளியே, மேலே இருந்தவர்கள் 120-க்கும் மேற்பட்டோர் எகிறி குதித்து தப்பி ஓட்டமெடுத்தனர். அவர்களை விரட்டியதில் 3 பேர்தான் பிடிபட்டனர். அதில் அதே அண்ணாநகரை சேர்ந்த தினேஷ், திருவள்ளூரை சேர்ந்த எழிலரசன், அம்பத்தூரை சேர்ந்த கணேசன் என்றும் இவர்கள் அனைவரும் அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள் என்றும் தெரியவந்தது. 3 பேருக்கும் வயது 19. தப்பி ஓடியவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இவ்வளவு துணிச்சலா?
சென்னையில், பட்டப்பகலில், அதுவும் அண்ணாநகர் போன்ற பரபரப்பு பகுதியில், பேருந்தை கடத்தும் தைரியம் எப்படி வந்தது என தெரியவில்லை. இப்படி கும்பலாக வந்து பேருந்தை கடத்தி, அட்டகாசம் செய்த சம்பவம் காவல்துறையை மட்டுமல்லாமல் சென்னை மக்களையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படி அராஜகம் செய்தால் எப்படி பெண்கள், மாணவிகள் பேருந்துகளில் பயணிக்க முடியும் என கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. பஸ்சை கடத்தி இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications