ஓடும் ரயிலில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ரயில்வே ஊழியர்கள்: தட்டி கேட்ட மாணவருக்கு அடி, உதை
திருவாரூர்: ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ரயில்வே ஊழியர்களை தட்டி கேட்ட மாணவன் தாக்கப்பட்டு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல இந்த சம்பவம் திருவாரூர் அருகே நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆதனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (17). இவர் நாகை மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடற்சார்ந்த பொறியியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரியை முடித்துவிட்டு நாகப்பட்டிணத்திலிருந்து காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரயிலில் நீடாமங்கலத்துக்கு சகமாணவிகள் சிலருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
சுரேஷ் பயணம் செய்த அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த திருவாரூர் ரயில் நிலைய அலுவலரும், அம்மாபேட்டையைச் சேர்ந்தவருமான அருண்ராஜ் (26), தஞ்சாவூர் ரயில்வே காலனியைச் சேர்ந்தவரும், பண்டாரவாடையில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றுபவருமான பிரபாகரன் (26), மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவரும், பண்டாரவாடையில் பாய்ண்ட் மேனாக பணியாற்றுபவருமான பிரபு (30) ஆகியோர் மாணவிகளிடன் சில்மிஷம் செய்துள்ளனர்.
இதை பார்த்த சுரேஷ், தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ரயில்வே ஊழியர்கள் மூவரும் சுரேஷை அடித்து உதைத்துள்ளனர். தாக்குதலால் காயமடைந்த சுரேஷ் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருவாரூர் ரயில் நிலைய சார்பு இன்ஸ்பெக்டர் ப. செந்தாமரை வழக்குப்பதிவு செய்து ரகளை செய்த மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார். வேலியே பயிரை மேய்வதைப்போல, ரயில்வே ஊழியர்களே ரயில் பயணிகளிடம் சில்மிஷம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications