ராத்திரி போனைப் போட்டு 'டார்ச்சர்' செய்த மாணவர்களை பிரம்பால் வெளுத்த வாத்தியார்!
திருப்பூர்: கொடி காத்த குமரன் பிறந்த ஊரான திருப்பூரில், தன்னை ராத்திரியெல்லாம் போன் போட்டு நீங்க தாஸா, லாடு லபக்கு தாஸா பாணியில் டார்ச்சர் செய்த 10 மாணவர்களை பிரம்பால் அடித்து வெளுத்து விட்டார் ஒரு ஆசிரியர்.
இந்த விவகாரம் போலீஸ் வரை போய் விட்டது. இருப்பினும் ஆசிரியர் புகார் கொடுத்ததால், அதன் பேரில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களின் எதிர்காலம் கெடும் என்று யோசித்த போலீஸார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளனர்.
தற்போது ஆசிரியர் அடித்தால் காயமடைந்த மாணவன் ஒருவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
விவேக் ஒரு படத்தில் டாக்டர் மாத்ருபூதத்திற்குப் போன் செய்து நீங்க வெறும் தாஸா இல்லை லாடு லபக்கு தாஸா என்று கலாய்த்து நடு ராத்தியில் கடுப்பேற்றுவார். அதே போல திருப்பூரில் 10 மாணவர்களிடம் சிக்கி தவியாத் தவித்துப் போயுள்ளார் ஒரு ஆசிரியர்.
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள், புதன்கிழமை அப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் செல்போனில் அழைத்துபேசி, தொல்லை கொடுத்தனராம். நள்ளிரவிலும் அந்த ஆசிரியருக்கு மாணவர்கள் இதுபோல தொல்லை கொடுத்ததால் அந்த ஆசிரியருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது.
அடுத்தநாள் வியாழக்கிழமை பள்ளிக்குச்சென்ற அந்த ஆசிரியர், முதல் நாள் பாட சம்பந்தமாக சந்தேகம் ஏற்பட்டு அதுதொடர்பாக தன்னைத் தொடர்பு கொள்ள செல்போன் எண்ணை வாங்கிய மாணவனைப் பிடித்தார்.
அவனிடம் விசாரித்ததில் 10 பேரிடம் உங்களது எண்ணைக் கொடுத்தேன் சார் என்று அவன் பத்து பேரையம் கை காட்டியுள்ளான். பிறகென்ன, அந்த பத்து பேரையும் வகுப்புக்கு வெளியே கூட்டி வந்த ஆசிரியர், அவர்களை பிரம்பை எடுத்து சரமாரியாக வெளுத்து விட்டார். அடித்த அடியில் ரவிச்சந்திரன் என்ற மாணவன் காயமடைந்ததாக தெரிகிறது. அவன் போய் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டான்.
அவனது தந்தை கோபமடைந்து பள்ளிக்கு ஓடி வந்தார். தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் இதுகுறித்து முறையிட்டார். போலீஸிலும் புகார் போனது. போலீஸார் வந்து விசாரித்தபோது ஆசிரியர் தனது கோபத்தை வெளிப்படுத்தி நடந்ததைக் கூறினார். மேலும் தானும் புகார் கொடுப்பதாக அவர் கூறினார்.
ஆனால் ஆசிரியர் புகார் கொடுத்து அதன் பேரில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுமே என்று யோசித்த போலீஸார் இரு தரப்பையும் அமைதிப்படுத்தி, சமாதானப்படுத்தி வைத்தனர்.


Click it and Unblock the Notifications
