அன்பான வாக்காள பெருமக்களே... அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது... நாளை வாக்குப் பதிவு!!
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. கடந்த ஒருமாதகாலமாக அக்னி வெயிலில் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்த தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களின் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 9ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி, 12ம் தேதி நெல்லையில் முடித்தார். கடந்த இரு தினங்களாக கடிதம், அறிக்கை மூலம் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சிந்தாரிப்பேட்டையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நேற்று காலை முதல் பிரச்சாரம் செய்து வந்தார். அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், மாலையில் கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
நாளை வாக்குப்பதிவு நடப்பதையொட்டி, தேர்தல் விதிகளின்படி நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதன் பிறகு எந்த வகையிலும் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், நேற்று காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கனிமொழி திருச்சியிலும், வைகோ தூத்துக்குடியிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி, மணலி, திருவொற்றியூர் மற்றும் வேளச்சேரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
இதுதவிர, அன்புமணி ராமதாஸ் தான் போட்டியிடும் பென்னாகரத்தில் இறுதிக்கட்டத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுக - அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி. கே.வாசன் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மயிலாப்பூரில் நிறைவு செய்தார். காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையிலும் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மயிலாப்பூரில் நிறைவு செய்தார்.
போடி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம், இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தனது தொகுதியான போடியில் நிறைவு செய்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமின்றி ஊடகங்களும் கண் காணிக்கப்படுகின்றன.
நேற்று மாலை 6 மணிக்கு மேல் 16ம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை, தேர்தல் தொடர்பான எந்த விளம்பரமும், பிரச்சாரமும் கூடாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications