திமுக கூட்டணி- 77, அதிமுக கூட்டணி- 73, பாமக-1, இழுபறி- 83: ஜூவி கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு 77 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 73 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவிற்கு 1 இடமும், 83 இடங்களில் இழுபறி நிலை நீடிப்பதாகவும், அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 16ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பது மே 19ம் தேதி தெரியவரும்.

மக்களின் தீர்ப்புக்கு முன்பாக ஊடகங்களில் தினசரியும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஜூனியர் விகடன் இதழ் இன்று சட்டசபை தேர்தலில் யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது பற்றிய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
திமுக கூட்டணி இந்த தேர்தலில் காங்கிரஸ், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கூட்டணிக்கு 77 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக உடன் சமக, இந்திய குடியரசுக்கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட 7 சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இதில் அதிமுக 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 73 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும்
83 இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது என்றும் ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.
கட்சி வாரியாக பார்த்தால் அதிமுகவிற்கு 73 இடங்களும், திமுகவிற்கு 64 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஜூனியன் விகடன் தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு.
இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிடும் ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி ராமதாஸ் வெற்றி பெறுவார்கள் என்றும், உளுந்தூர் பேட்டையில் விஜயகாந்த் தோல்வியடைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல தனி அணியாக போட்டியிடும் பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் 234 தொகுதிகளில் களமிறங்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் ஜூனியன் விகடன் இதழ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications